வடகொரிய விவகாரத்தில் ஏதாவது செய்யவேண்டும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 02:03

வாஷிங்டன்,

வடகொரியா விவகாரத்தில் வித்தியாசமாக சிந்தித்து செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஏதேனும் செய்தே தீரவேண்டும் என்ற நிலையில் நாம் உள்ளோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே கடுமையான வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனையை நிறுத்தவும் பல நெருக்கடிகள் கொடுத்து பேச்சுவார்த்தைக்கு உடன்பட வைக்கவும் ஐ.நா வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதித்தது. ஆனால் வடகொரியா எதற்கும் அசரவில்லை.
இந்நிலையில் புதன்கிழமை அன்று கனடா நாட்டு பிரதமருடன் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் வடகொரியா விவகாரம் குறித்து பேசினார்.

‘வடகொரியா விவகாரத்தில் மற்றவர்களை விட நான் சிறிது வித்தியாசமாகவே நான் நடந்துகொள்வேன். இந்த விவகாரத்தில் நான் மற்றவர்களை விட வலிமையாகவும் கடினமாகவும் செயல்பட முடியும். ஆனால் அதேசமயம் நான் மற்றவர்களின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறேன்’’

‘‘அமெரிக்கா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்திற்கும் இது பெரும் பிரச்சனை என்பதால் அனைவருக்கும் ஏற்றவகையில் சரியான முடிவை எடுப்பேன்’’ என்று டிரம்ப் தெரிவித்தார். அதன்பின் புதன்கிழமை இரவு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வடகொரியா விவகாரத்தில் ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் வகையில் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.

‘‘வடகொரியாவை 25 ஆண்டுகள் முன்பே அடக்கியிருக்க வேண்டும். அல்லது 20, 15 ஏன் 5 வருடங்களுக்கு முன்பு கூட வடகொரியா விவகாரத்தை சீர்செய்திருக்கலாம். நான் ஒபாமாவை மட்டும் குறிப்பிட்டு கூறவில்லை ஆனால் அவர் நினைத்திருந்தால் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.’’ ‘‘ஆனால் ஒபாமா அவ்வாறு செய்யவில்லை. அதனால் இப்போது பிரச்சனை பூதாகரமாக உருவாகி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது’’ என டிரம்ப் குற்றம்சாட்டினார்.