நவாஸ் ஷெரிப் மகன்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக 30 நாள் கெடு

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 01:55

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மகன்களான ஹாசன் மற்றும் ஹூசைன் இருவரும் பனாமாகேட் ஊழல் வழக்கு விசாரணைக்காக 30 நாட்களுக்குள் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மீறினால் அவர்கள் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று அந்த நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பனாமா ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நவாஸ் ஷெரிப், அவரது மகன்கள் ஹாசன், ஹூசைன், மகள் மரியம் மற்றும் மருமகன் முகமது சாஃப்தார் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இதுவரை மூன்று முறை தேதி நிர்ணயம் செயதும் ஹாசன் மற்றும் ஹுசைன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.  லண்டனில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் தங்கள் அம்மா குல்சும் நவாஸை சந்திக்க இருவரும் லண்டன் சென்றுள்ளனர்.அதன் காரணமாக பனாமாகேட் ஊழல் விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராக 30 நாள் கெடு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலகெடுவிற்குள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையென்றால் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக முஸ்லிம் லீக் கட்சி வெளியிட்ட செய்தியில் ஹாசன் மற்றும் ஹுசைன் இருவரும் தங்கள் பிரிட்டன் குடியுரிமையை பயன்படுத்தி விசாரணையை தவிர்க்க முடிவெடுத்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘‘அவர்கள் இருவரும் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் அவர்களை பாகிஸ்தான் சட்டம் கட்டுப்படுத்த முடியாது. எனவே அவர்கள் இருவரும் பனாமாகேட் வழக்கு விசாரணையில் அஜராக மாட்டார்கள்’’ என முஸ்லிம் லீக் கட்சி தலைவர் பெர்வாய்ஸ் ரஷித் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணக்காக நவாஸ் ஷெரிப் மகள் மரியம் மற்றும் மருமகன் முகமது சாஃப்தார் ஆகியோர் நாளை விசாராணைக்கு நேரில் ஆஜராவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.