தனிநாடு அறிவிப்பை கைவிட கேட்டலோனியாவுக்கு ஸ்பெயின் 8 நாள் கெடுவிதிப்பு

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 01:42

மாட்ரிட்:

சுதந்திர தனிநாடு அறிவிப்பை கைவிட கேட்டலோனியா தலைவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் 8 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளார். மீறினால் கேட்டலோனியாவின் சுயாட்சி அதிகாரத்தை ரத்து செய்து, ஸ்பெயினின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வருவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கில் உள்ள பகுதி கேட்டலோனியா. 1981ம் ஆண்டு ஸ்பெயினில் ராணுவக்கிளர்ச்சி ஏற்பட்டது. அந்தப் புரட்சி தோற்கடிக்கப்பட்டது. எனினும் கேட்டலோனியா பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. தன்னாட்சி பெற்ற பகுதியாக கேட்டலோனியா அறிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு ஆட்சி மாற்றம் வந்து அரசுகள் அமைந்த போதிலும் ஸ்பெயினுக்கும் கேட்டலானியாவுக்கும் ஒத்துப்போகவில்லை. கேட்டலோனியா மக்களுக்கு தனி மொழி, கலாச்சாரம் உள்ளது. ஸ்பெயின் அரசு தங்களை புறக்கணிப்பதாக அங்கு பேச்சுகள் எழுந்தன. தனிநாடு கோரிக்கைகளும் வலுத்தன.

கடந்த அக்டோபர் 1ம் தேதி கேட்டலோனியாவில் தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 90 சதவீத மக்கள் தனிநாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதை ஏற்று கேட்டலோனியா அதிபர் கார்லஸ் பூஜ்டியமோன்ட் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டார். பிற தலைவர்களும் இதில் கையெழுத்து இட்டு இருந்தனர். எனினும், சுதந்திர அறிவிப்பை உறுதியாக வெளியிடாத பூஜ்டியமோன்ட், ஸ்பெயினுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக திடீர் பல்டி அடித்தார்.

பொதுவாக்கெடுப்பில் கேட்டலோனியாவின் 43 சதவீத மக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். எனவே, அதன் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஸ்பெயின் அறிவித்தது.

இதனால் குழப்பமான சூழல் நிலவி வந்தது.

இந்நிலையில், கேட்டலோனியா தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் இன்று அறிவித்தார்.

தனிநாடாக செல்வதா? அல்லது ஸ்பெயினுடன் இணைந்து இருப்பதா? என்ற முடிவை அக்டோபர் 16ம் தேதி கேட்டலோனியா தெளிவாக அறிவிக்க வேண்டும். பிரிந்து செல்வது தான் முடிவு என்றால் அதை திரும்பப் பெற மேலும் 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதற்குள் திரும்பப் பெறவில்லை என்றால் அக்டோபர் 19ம் தேதி கேட்டலானியா அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு, அந்தப் பகுதி ஸ்பெயினின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படும் என்று மரியானோ ரஜோய் கூறியுள்ளார்.

இதற்கு ஸ்பெயின் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 155 அதிகாரம் அளிக்கிறது.

ஆக, கேட்டலோனியா தலைவர்களுக்கு மொத்தம் 8 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

கேட்டலோனியா தரப்பில் என்ன பதில் வரும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. பூஜ்டியமோன்ட் அரசு எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் செயல்படும் மைனாரிட்டி அரசாக உள்ளது. தனிநாடு அறிவிப்பை அவர் வெளியிடவில்லை என்றால், கூட்டணி கட்சியான இடதுசாரி சியூபி கட்சி ஆதரவை வாபஸ் பெறும். எனில், அவருடைய ஆட்சி கவிழும்.

ஸ்பெயினின் மொத்த பொருளாதார பங்களிப்பில் கேட்டலோனியா பங்கு 5ம் இடத்தில் உள்ளது. மொத்த ஏற்றுமதியில் கேட்டலோனியாவின் பங்கு 25 சதவீதம் ஆகும்.

அக்டோபர் 1ம் தேதி பூஜ்டியமோன்ட் சுதந்திர நாடு அறிவிப்பை வெளியிடுவார் என்று டி.வி.க்கள் முன்பு காத்திருந்த மக்கள் அவருடைய குழப்படி அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்தனர். 

இன்னொரு புறம், கேட்டலோனியாவின் சில பெரிய நிறுவனங்கள் தங்கள் தலைமையகத்தை ஸ்பெயினுக்கு மாற்றி விட்டன. சில நிறுவனங்கள் பூஜ்டியமோன்ட் எடுக்கும் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. 

இதனால் கேட்டலோனியாவில் உச்சக்கட்ட குழப்ப நிலை நீடித்து வருகிறது.

கேட்டலோனியா மக்களின் சுதந்திர கனவு நிலைக்குமா? இல்லை ஸ்பெயின் அந்தப் பகுதியை தன் ஆளுகைக்குள் கொண்டு வருமா?

இன்னும் சில தினங்களில் முடிவு தெரிந்து விடும்.