ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை : அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 01:40

அலகாபாத்,

நாட்டையே உலுக்கிய ஆருஷி தல்வார் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவரது பெற்றோர் டாக்டர் ராஜேஷ் மற்றும் நூபுர் தல்வார் தம்பதியினரை இன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

உத்தர பிரதேச மாநிலம்  நொய்டா பகுதியை  சேர்ந்த  டாக்டர் தம்பதியினர் ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர்.  கடந்த 2008 ஆம் ஆண்டு அவர்களின்  14 வயது மகள் ஆருஷி வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
காணாமல் போன வீட்டு வேலையாள், ஹேம்ராஜ் (45)  மீது சந்தேகப்பட்டு போலிஸ் அவரைத் தேடிக் கொண்டிருந்த பொழுது இரண்டாம் நாள் ஆருஷியின் வீட்டு மாடியில் ஹேம்ராஜின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரட்டை கொலைகள் தொடர்பாக உத்தரபிரதேச போலிசார் சரியாக விசாரணை நடத்தவில்லை என்று பல தரப்பில் குற்றசாட்டு எழுந்தது. அதனால் அன்றைய உத்தரபிரதேச முதல்வரான மாயாவதி இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தார்.

விசாரணையின் முடிவில் ஆருஷிக்கு ஹேம்ராஜுடன்  கள்ள தொடர்பு இருந்ததாக சந்தேகம் கொண்ட அவள்  பெற்றோர்  கூட்டாக சேர்ந்து இருவரையும் கொலை செய்ததாக சி.பி.ஐ.  குற்றம் சாட்டியது. அதன் விளைவாக கடந்த 2013ம் ஆண்டு சி.பி.ஐ. சிறப்புநீதிமன்றம்  ஆருஷி பெற்றோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இருவரும் காசியாபாத் நகரில் உள்ள தஸானா சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அலகாபாத்உயர்நீதிமன்றத்தில் ஆருஷியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. ஆருஷியை கொலை செய்தது அவளது பெற்றோர்கள் தான் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் இருவரையும் விடுதலை செய்து  அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.