சொத்துகுவிப்பு வழக்கில் இன்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் மீண்டும் ஆஜர்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 01:38

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தர் தன் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடமை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நேரில் ஆஜரானார்.

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பாகிஸ்தான் நிதி அமைச்சர்  இஷாக் தர் மீது தேசிய பொறுப்புடமை நீதிமன்றம் ஜூலை 28ம் தேதி சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்தது.
இன்று பாகிஸ்தான் பொறுப்புடமை நீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கு விசாரணையில் இஷாக் தர் நேரில் ஆஜரானார். அவருக்கு எதிராக அல்-பராக்கா வங்கியின் துணை தலைவர் தாரிக் ஜாவெத் மற்றும் தேசிய முதலீடு அறக்கட்டளையை சேர்ந்த ஷாகித் ஆசிஸ் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.
ஷாகித் ஆசிஸ் நீதிமன்றத்தில் கூறிய சாட்சியத்தில் ‘‘முன்னாள் அமைச்சர் இஷாக் தர் கடந்த 2015ம் ஆண்டு பாகிஸ்தான் நிதி அமைச்சராக இருந்தப்போது 12 கோடி டாலரை தன் அறக்கட்டளையில் முதலீடு செய்ததார்.

ஆனால் ஜனவரி 2017ல் பனாமாகேட்  ஊழல் விவகாரம் எழுந்த போது அப்பணத்தை அவர் திரும்பி பெற்றுக்கொண்டார்’’ என்று தெரிவித்தார்.

அல்- பராக்கா வங்கி துணை தலைவர் தாரிக் ஜாவெத் வங்கியின் லாகூர் கிளையில் உள்ள இஷாக் தர்ரின் வங்கி கணக்குகளை  நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். கடந்த 1991ம் ஆண்டு இஷாக தர் இந்த வங்கி கணக்கை துவங்கியதாகவும் தெரிவித்தார்.

இருவரும் இஷாக் தர்ரின் வழக்கறிஞர் குவாஜா ஹாரிஸால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர்.