காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் உள்ள இமாசலப் பிரதேசத்தில் நவம்பர் 9ம் தேதி சட்டமன்றத் தேர்தல்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 00:45

புதுடில்லி,

வீரபத்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிப் பொறுப்பில் உள்ள இமாசலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல்குமார் ஜோதி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

தேர்தல் ஆணையர்கள் ஓம் பிரகாஷ் ரவாத், சுனில் அரோராவும் தேர்தல் தேதியை அச்சல்குமார் ஜோதி அறிவிக்கும் பொழுது உடனிருந்தனர்.

இமாசலப் பிரசேத்தில் உள்ள 68 தொகுதிகளிலும் நவம்பர் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். எலெக்ட்ரானிக்ஸ் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடைபெறும். வாக்களித்தவர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய ரசீது பெறலாம் என ஜோதி கூறினார்.

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18ம் தேதி நடைபெறும். தேர்தல் நடைமுறை விதிகள் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்றே அமலுக்கு வருகிறது எனவும் ஜோதி கூறினார்.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் குஜராத் தேர்தல் முடிவை எந்த வகையிலும் பாதிக்காது. டிசம்பர் 18ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும்.

தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து தேர்தல் நடத்துவதற்கு 46 நாள் அவகாசம் வேண்டும் என்ற தற்போதைய விதியை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் செலவு ரூ.25 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பற்றிய முக்கிய விவரங்கள்:

மொத்த தொகுதிகள் – 68

தேர்தல் அறிவிக்கை நாள் – அக்டோபர் 13, 2017

வேட்பு மனு இறுதிநாள் – அக்டோபர் 23, 2017

வேட்புமனு பரிசீலனை – அக்டோபர் 24, 2017

வேட்புமனு வாபஸ் இறுதிநாள் – அக்டோபர் 26, 2017

வாக்குப்பதிவு – நவம்பர் 9, 2017

வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 18, 2017

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்று செய்தியாளர்கள் கேட்டனர். டிசம்பர் 31ம் தேதிக்குள் அங்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவையொட்டி ( 2016, டிசம்பர் 5ம் தேதி) அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக ஆர்.கே.நகர் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பிற ஊழல் நடவடிக்கைகள் காரணமாக ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் ரத்துச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.