ரூ. 241 கோடி மதிப்பிலான திட்டங்கள் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 00:40

சென்னை

தலைமைச் செயலகத்தில் இருந்து ரூ. 241 கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்துவைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 11.10.2017 அன்று  தலைமைச் செயலகத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நிர்வாக மற்றும் தகவல் தொழில் நுட்ப கட்டடத்தில் 61 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில தரவு மையத்திற்கான பேரிடர் மீட்பு மையம், கலந்தாய்வுக் கூடம், விருந்தினர் கூடம் மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாகத் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர், திருநெல்வேலி மாவட்டம் - கங்கைகொண்டான் மற்றும் மதுரை மாவட்டம் - இலந்தைகுளம் ஆகிய இடங்களில்  அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 24 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டடம், கலந்தாய்வுக் கூடம், விருந்தினர் கூடம், உணவருந்தும் கூடம் மற்றும் குடிநீர் உட்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்தார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம்,  ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே   29 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி  மூலமாக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், 171 கோடியே 55 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.