தேசியக்கொடியை அவமதித்ததாக ஹர்திக் பட்டேல் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 00:13

ராஜ்கோட்:

தேசியக்கொடியை அவமதித்ததாக ஹர்திக் பட்டேல் மீது தொடரப்பட்ட வழக்கை குஜராத் அரசு வாபஸ் பெற்றுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராடி வருபவர் ஹர்திக் பட்டேல்.
ராஜ்கோட்டில் உள்ள கந்தேரி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற இருந்தது. அன்றைய தினம் இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி கந்தேரி மைதானத்தை ஹர்திக் பட்டேல் தன் ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.
போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது ஒரு வாகனத்தின் மீதேறி நின்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

வாகனத்தின் மீது ஏறும்போது ஹர்திக் பட்டேல் தன் வைத்திருந்த தேசியக்கொடி அவருடைய காலில் மிதிபட்டது.

இதனால் தேசியக்கொடியை அவமதித்ததாக ஹர்திக் பட்டேல் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இரண்டாண்டுகள் கழித்து இந்த வழக்கை குஜராத் அரசு வாபஸ் பெற்றுள்ளது. குஜராத் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ராஜ்கோட் கலெக்டர் விக்ராந்த் பாண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டார். பட்டேல் போராட்டக்குழுவினர் மீதான 5 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

குஜராத்தில் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பட்டேல் மக்களின் வாக்குகளை கவரும் வகையில் ஆளும் பாஜக அரசு வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.