ரியல் எஸ்டேட் துறை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படுமா? ஜெட்லி பதில்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 00:04

வாஷிங்டன்:

ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது பற்றி நவம்பர் 9ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவில் தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெட்லி இன்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
இந்தியாவில் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடைபெறும் துறைகளில் ஒன்றாக ரியல் எஸ்டேட் உள்ளது. இந்தத் துறை இன்னும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படாமல் இருக்கிறது. சில மாநிலங்கள் ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று சொல்கின்றன. சில மாநிலங்கள் வேண்டாம் என்று எதிர்க்கின்றன. வரும் நவம்பர் 9ம் தேதி கவுகாத்தியில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்படும்.

 தனிப்பட்ட முறையில் நான் இந்தத் துறையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதையே விரும்புகிறேன். அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு ஒருமித்த முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

ஜிஎஸ்டியின் கீழ் ரியல் எஸ்டேட் துறைக்கு 12 சதவீத வரி விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. புதிய கட்டிடம் கட்டுதல், கட்டிட விற்பனை போன்றவற்றுக்கு மட்டுமே இந்த வரி விதிக்கப்படும். நில விற்பனைக்கு வரி விதிக்கப்படாது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி ஜெட்லி கூறும்போது, இந்நடவடிக்கையால் நீண்ட கால பலன்கள் ஏற்படும். இதனால் அதிகமானவர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனர். ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 3 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. வரி செலுத்துவதில் வெளிப்படைத்தன்மை வந்துள்ளது” என்றார்.

இந்திய வங்கிகளை வலுப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை மத்திய அரசு வகுத்து வருவதாகவும் ஜெட்லி கூறினார். வராக்கடன் பிரச்சினையால் வங்கிகள் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் ஜெட்லி குறிப்பிட்டார்.