தமிழிணைய இரண்டாவது மென்பொருள் தொகுப்பு - முதல்வர் பழனிசாமி வெளியீடு

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 23:17

சென்னை:

தமிழிணைய இரண்டாவது மென்பொருள் தொகுப்பை முதல்வர் பழனிசாமி வியாழனன்று வெளியிட்டார்

மேம்படுத்தப்பட்ட தமிழ் இணைய கல்வி கழகம்

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் http://www.tamilvu.org/ என்ற இணையதளம் 12 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வியாழனன்று துவக்கி வைத்தார்கள்.

இம்மேம்படுத்தப்பட்ட இணையதளம் பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் கல்வித் திட்டங்கள், நூலகம், கணித்தமிழ், ஆய்வு மற்றும் உருவாக்கம், தகவலாற்றுப்படை போன்ற பல விவரங்களைக் கொண்டிருக்கும்.

தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் 59 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள “தமிழிணையம் மென்பொருள் தொகுப்பு - II" என்னும் தமிழ் மென்பொருள் தொகுப்பில், தமிழ் இணையம்-சொல் பேசி, தமிழ் இணையம் - விவசாயத் தகவி, தமிழ் இணையம் - தொல்காப்பியத் தகவல் பெறுவி, தமிழ் இணையம் - தமிழ்ப் பயிற்றுவி மற்றும் தமிழ்இணையம்-நிகழாய்வி எனும் 5 தமிழ் மென்பொருள்கள் அடங்கியுள்ளன.  இம்மென்பொருள் தொகுப்பினைத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளத்திலிருந்து பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

தமிழ்மொழி அல்லது தமிழோடு தொடர்புடைய தொல்லியல் சின்னங்கள், செப்பேடுகள், கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள், சுவரோவியங்கள், கோயில்கள், சிற்பங்கள், நாணயங்கள் உள்ளிட்ட ஆய்வாதார வளங்களைத் தமிழ் இணையக் கல்விக்கழகம், தானே ஆவணப்படுத்தியும், எழும்பூர் அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கூடம், போன்ற தமிழக அரசின் பிற துறைகளில் ஆவணப்படுத்தியதைச் சேகரித்தும் முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள “தகவலாற்றுப்படை" என்னும் இணையதளத்தையும் முதல்வர் துவக்கிவைத்தார்.

ஒரு கோடி ரூபாய் செலவினத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் “தமிழ் மின் நூலகம்" (Tamil e-Library) இணையதளத்தினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இம்மின் நூலகத்தில் தமிழ் மொழி தொடர்புடைய அச்சு நூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட ஆய்வாதார வளங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் பயன்பெற்றிடும் வகையில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. 

“இ-மடல்"

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையினால் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் மாதம் இரு முறை வெளிவரவுள்ள “இ-மடல்" (e-News Letter) என்னும் மின்மடலை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று வெளியிட்டார்கள். இந்த மின்மடல் மூலம், மத்திய, மாநில அரசுகளின் திட்டம், தற்போதைய தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகள், மின்னாளுமையில் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.