குஜராத்தில் காங். ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன்கள் தள்ளுபடி: ராகுல் காந்தி வாக்குறுதி

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 22:46

அகமதாபாத்:

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

குஜராத்தில் டிசம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். அவர் நேற்று தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார்.

ராகுல் காந்தி நேற்று கேதா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் சோட்டா உதிப்பூர், லிம்கேதா, தேவ்கத் பாரியா, கோதாரா, பாக்வேல் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பேசினார்.

அங்கு ராகுல் காந்தி பேசியதாவது:

குஜராத் அரசு பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பழங்குடிகள், விவசாயிகள், அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை அரசு கண்டுகொள்வதில்லை.

நர்மதா நதியின் குறுக்கே அணை கட்டுவதற்காக பழங்குடியின மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். ஆனால் நர்மதா நதியின் நீர் நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. விவசாயிகளும், பழங்குடியின மக்களும் தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள்.  

தொழில்துறையின் முதுகெலும்பான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை குஜராத் அரசு கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. அந்த நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய பணிகள், பெருநிறுவனங்களுக்கு செல்கின்றன. இதனால் 30 லட்சம் குஜராத் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள்.

ஏராளமான பணம் செலவழித்துப் படித்தும் ஏராளமானவர்கள் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்சினைகள் களையப்படும். விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். விவசாய உற்பத்தி பொருள்கள் அனைத்துக்கும் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

சுற்றுப்பயணத்துக்கு இடையே மாணவர்கள், பெண்கள், விவசாயிகள், பழங்குடியின மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் கலந்துரையாடினார். குஜராத்தில் உள்ள முக்கிய கோவில்கள், மத வழிபாட்டுத்தலங்களுக்கும் அவர் சென்றார்.