உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்து திமுக எம்.எல். ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 22:46

சென்னை,

திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேர் மீது உரிமைக்குழு தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை அக்டோபர் 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை சட்டசபைக்குள் கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு கூடி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து மு.க. ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யபட்டது.

அந்த மனுவில் தமிழக அரசு குறுக்கு வழியில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக குட்கா விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்த நோட்டீஸை எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவே இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தனர்

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி எம். துரைசாமி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 21 பேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு இருந்தார்

இந்நிலையில் இந்த வழக்கு, இன்று மீண்டும் நீதிபதி கே. ரவிசந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முன்பு, சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக் குழுவின் தலைவர் சார்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் இந்த வழக்கில் பதில் மனு தயாராக உள்ளது என்றும், இன்றைக்குள் எதிர் மனுதாரர்களுக்கு வழங்கிவிடுவோம். எனவே வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதை அடுத்து வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 27-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக கூறினார்.

அதுவரை ஏற்கெனவே உள்ள இடைக்கால உத்தரவு தொடரும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.