அரசு வேலைவாய்ப்பை குறைக்க பணியாளர் சீரமைப்புக் குழு அமைப்பு: ராமதாஸ் தகவல்

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 22:20

சென்னை,

அரசு வேலைவாய்ப்புகளை குறைக்க பணியாளர்கள் சீரமைப்புக் குழுவை அரசு அமைத்துள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்தியுள்ள தமிழக அரசு, ஓசையின்றி மற்றொரு நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கிறது. அரசுப் பணியிடங்களின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைக்க பணியாளர் சீரமைப்புக் குழுவை அமைத்துள்ளது.
தமிழக அரசின் இந்தத் திட்டம், அரசு வேலைவாய்ப்புகளை ஒழிக்கக்கூடிய மிக மோசமான சதியாகும்.

அரசு பணியிடங்கள் வருவாயை அதிகரிப்பதற்கான கருவிகள் ஆகும். அவற்றை ஒழிப்பதன் மூலம் அரசின் செலவுகளைக் குறைத்து விட முடியாது. எனவே காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களையும் நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டும். பணியாளர்கள் சீரமைப்புக் குழு அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இதைச் செய்ய அரசு மறுத்தால் இளைஞர்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து எந்த முடிவையும் இன்னும் தமிழக அரசு அறிவிக்கவில்லை. இது அரசு ஊழியர்களின் சமூக, வாழ்வாதாரப் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரம் என்பதால் விரைவாக முடிவெடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.