பொருளாதாரச்சரிவுக்கு 10 காரணங்கள்! பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 20:41

புதுடில்லி:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி இறங்கு முகத்தில் சென்று கொண்டிருக்கும் சூழலில், வீழ்ச்சிக்கான காரணங்கள் பற்றி பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு ஆராய்ந்து வருகிறது. இந்தக்குழுவின் முதல் கூட்டம் புதன்கிழமை டில்லியில் நடைபெற்றது. பொருளாதாரச்சரிவுக்கான முக்கியக் காரணங்களாக 10 பிரச்சினைகளை கண்டறிந்ததாக அந்தக்குழுவின் தலைவர் விவேக் தீப்ராய் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால், அவை என்னென்ன என்பதை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

பொருளாதாரம் குறித்த ஆலோசனைகளை பெற பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இந்தக்குழுவின் தலைவராக விவேக் தீப்ராய் உள்ளார். ஆஷிமா கோயல், சுர்ஜித் பல்லா, ரதின் ராய், ரத்தன் வாட்டாள் ஆகியோர் இந்தக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

பொருளாதார ஆலோசனைக்குழுவின் முதல் கூட்டம் டில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இப்போதைய பொருளாதார வீழ்ச்சி குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் இப்போதைய பொருளாதார நிலை குறித்து குழுவில் உள்ளவர்களுக்கு எடுத்துரைத்தார்.

அதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய விவேக் தீப்ராய் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க குழு உறுப்பினர்கள் உரிய முயற்சிகளை எடுப்பார்கள், அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.

நிதிக்கொள்கை, நாணயக்கொள்கை, வேளாண்மை, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் இந்தக்குழு ஆலோசனைகள் வழங்கும். அதில் நாணயக்கொள்கை விஷயத்தில் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் தலையிட மாட்டோம். ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்த பிறகே அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவோம் என்று விவேக் ராய் தெளிவுபடுத்தினார்.

2018ம் ஆண்டு பிப்ரவரியில் அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்குள் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய துறைகளின் வளர்ச்சிக்கு பொருளாதார ஆலோசனைக்குழு ஆலோசனைகள் வழங்கும்.