எனக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு இல்லை: டில்லியில் ஓ.பி.எஸ். பேட்டி

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 19:19

புதுடில்லி:

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் இன்று சந்தித்துப் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் மின் உற்பத்திக்கு கூடுதல் நிலக்கரி ஒதுக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறினார். தனக்கும் தமிழக முதல்வர் பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு 7.45 மணிக்கு டில்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன்  ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் எம்.பி., மனோஜ்பாண்டியன் ஆகியோரும் சென்றனர்.

இன்று (வியாழக் கிழமை) பகல் 11 மணிக்கு ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் அலுவலகத்துக்குப் புறப்பட்டு சென்றார். 11.30 மணிக்கு பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.

இந்தச் சந்திப்புக்குப்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்தும், அதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்தேன்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய மருத்துக்குழுவை அனுப்பி வைப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்உற்பத்திக்கு தேவையான கூடுதல் நிலக்கரி ஒதுக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்.

அனைவருக்கும் வீடு வழங்கும் பிரதமரின் திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு மொத்தம் 10 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 3 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு ஆகி உள்ளன. அது தொடர்பாகவும் பிரதமரிடம் பேசினேன்.

எனக்கும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஜெயலலிதா அமைத்த அரசையும் கட்சியையும் கட்டிக்காப்பதில் நாங்கள் உறுதியேற்று செயல்படுகிறோம்.

அனைத்து அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து தான் முதல்வர் பழனிசாமி முடிவு எடுக்கிறார்.

சிவாஜி சிலை திறப்பு விழாவிற்காக வைக்கப்பட்ட பிளக்ஸில் என் படம் இல்லாததில் எனக்கு வருத்தம் எதுவும் இல்லை.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

டிடிவி தினகரனை மீண்டும் சேர்த்துக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, 

கீழ்மட்டத்தில் இருந்து வருகிறவர்களுக்குத் தான் கட்சியில் முதன்மை இடம் கிடைக்கும். தினகரனை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று ஓ.பி.எஸ். பதில் அளித்தார்.

மின்சாரத்துறை சம்பந்தமான கோரிக்கைக்காக மின்துறை அமைச்சர் தங்கமணியும் டில்லி சென்றுள்ளார். அவர் ஓ.பி.எஸ். உடன் சென்று பிரதமரை சந்திக்கவில்லை. அவர் மதியத்திற்குப் பின் பிரதமரை சந்திப்பார் எனத் தெரிகிறது. அவர் பிரதமரை சந்தித்த பிறகு நாங்கள் அவருடன் பேசுவோம் என்று ஓ.பன்னீர்செல்வசம் நிருபர்களிடம் கூறினார்.