மீண்டும் ஒலிக்கிறது சுயாட்சி குரல்!

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2017
மத்தியில் அதிகாரக் குவியல் கூடாது, மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற குரல்கள் கடந்த 60களில் பலமாக ஒலிக்கத் தொடங்கியது.

இந்தியா முழுமைக்கும் மத்தியிலும், மாநிலங்களிலும் காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆட்சி நடைபெற்ற காலம் வரையிலும் இத்தகைய குரல் எழவில்லை. மத்திய – மாநில உறவுகளில் பெருமளவு இணக்கம் இருந்ததால் அதிகார சுயாட்சி என்கிற மனப்போக்கு, மாநில ஆட்சியாளர்களிடம் இல்லை.

அறுபதுகள் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக மாநிலக் கட்சிகள் வளர்ச்சி பெற்று ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றிய பிறகுதான் மத்தயில் ஒட்டுமொத்த அதிகார குவிப்பு கூடாது என்ற குரல் வலிமையாக ஒலிக்கத் தொடங்கியது.

பல்வேறு மாநிலங்களில் இத்தகைய குரல்கள் எழுந்தாலும் கூட 1967ல் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பேற்ற திமுகவின் ‘மாநில சுயாட்சி’ குரல்தான் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை, அரசியல் அதிகார வீச்சை வெளிப்படுத்தியது.

திமுக நிறுவனத் தலைவர் அண்ணா காலத்திலேயே மாநில சுயாட்சி கோரிக்கை எழுப்பப்பட்டாலும், அவரது மறைவுக்கு பிறகு கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற கருணாநிதிதான், இந்த பிரச்னையில் மிகத் தீவிரம் காட்டினார். இது தொடர்பாக வலுவான பிரச்சார இயக்கத்தையே முன்னெடுத்தார்.

திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி மாறன் ஏன் வேண்டும் மாநில சுயாட்சி என்பதை விளக்கி, பெரிய நூல் ஒன்றையே எழுதி வெளியிட்டார். மாநில சுயாட்சியை வலியுறுத்தி மாவட்டங்கள் அளவிலும், மாநிலங்கள் அளவிலும் மாநாடுகளை திமுக நடத்தியது.

இதையடுத்து, மத்திய காங்கிரஸ் அரசு, மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஆலோசனை வழங்க தனி ஆணையும் ஒன்றையே அமைத்தது. நீதிபதி சர்க்காரியா தலைமையிலான இந்த ஆணையம் மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை அனுப்பினாலும், அவை கண்டுகொள்ளப்படவில்லை. மத்திய அரசு ‘பெரியண்ணன்’ மனப்பான்மையிலேயே மாநில அரசுகளை நடத்தி வந்தது. ‘கல்வி’ உள்ளிட்ட ஒன்றிரண்டு அதிகாரங்கள் மாநில அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்ததைக்கூட சட்டத் திருத்தங்கள் மூலம் மத்திய – மாநில அரசுகளின்  பொதுப்பட்டியலுக்கும், மத்திய பட்டியலுக்கும் கொண்டு சென்று விட்டனர்.

இதன் விளைவாக மாநில அரசுகள் பலமிழந்து, செயலிழந்து, எதற்கெடுத்தாலும்,மத்திய அரசின் தயவை நாடும் நிலையை தேசியக் கட்சிகள் உருவாக்கி விட்டன. இதனால், மாநிலத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. மத்தியில் அதிகாரக் குவிப்பு இருப்பதனால் எந்த அளவிற்கு மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதை அங்கு பா.ஜ. தலைமையிலான அரசு அமைந்த பிறகுதான், அவர்களின் எதேச்சாதிகார செயல்பாடுகளுக்கு பிறகுதான் நாம் தெளிவாக உணர முடிகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை முல்லை பெரியாறு, காவிரியாறு, பாலாறு, சிறுவாணி ஆறு உள்ளிட்ட ஆறுகளின் மூலமாக நம்மை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கும் நதிநீர் பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு முனைப்புக் காட்டுவதில்லை.

‘நீட்’ தேர்வு பிரச்னையில் பிடிவாதம் காட்டி ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை நாசப்படுத்திவிட்டது. தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகளை காண வேண்டி காலம் காலமாக போராடினாலும், வாதாடினாலும் கண்டு கொள்வதில்லை.

ஆபத்தான அணு மின் திட்டத்தை திணிப்பது, விளை நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ – கார்பன் திட்டம், நியூட்ரான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான திட்டங்களை தமிழகத்தில் வலுக்கட்டாயமாக திணிப்பது, வளர்ச்சிபெற்ற மாநிலம் எனக்கூறி மத்திய அரசின் நிதி உதவியை குறைப்பது, வளர்ச்சிக்கான முக்கிய திட்டங்களை தராமல் புறக்கணிப்பது, மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், மத்திய அரசின் திட்டங்களுக்கும் கூட போதிய நிதி உதவியை வழங்காதது என, தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதன் விளைவாகத்தான் தற்போது மீண்டும் ‘மாநில சுயாட்சி’ எனும் போர்க்குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

எழுபதுகளுக்குப் பிறகு மத்தியில் தனிக்கட்சி ஆட்சி முடிவுக்கு வந்து கூட்டணி ஆட்சி ஏற்பட்டு, அதில் மாநிலக் கட்சிகளும் பங்கேற்கும் நிலை வந்ததால், ‘மாநில சுயாட்சி குரல்’ கொஞ்சம் அமுங்கி இருந்தது.

மீண்டும் மத்தியில் தனிக்கட்சி ஆட்சி அமைந்து அதன் அதிகாரக் கரங்கள் மாநில அரசுகளின் குரல் வளையை நெரிக்கத் தொடங்கி இருப்பதால், மீண்டும் இந்த போர்க்குரல், வழக்கம் போல தமிழகத்தில் இருந்தே ஒலிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்தான். அண்மையில், சென்னையில் திருமாவளவன் நடத்திய மாநாட்டில் பங்கேற்ற மாநில, தேசிய தலைவர்கள் பலர். ‘மாநில சுயாட்சி’யின் அவசியத்தை வலியுறுத்தி பேசியுள்ளனர்.

ஒட்டுமொத்த அதிகாரங்களையும் கொண்டு மாநிலங்களை கொத்தடிமைகளாக நடத்தும் போக்கு கைவிடப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருமாவளவனை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருகிற நவம்பர் மாதம் ‘மாநில சுயாட்சி’ மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். திமுக சார்பிலும் டிசம்பர் அல்லது 2018 ஜனவரியில் ‘மாநில சுயாட்சி’ மாநாட்டை நடத்த உள்ளனர்.

ஊர் கூடித் தேர் இழுக்க தொடங்கி விட்டார்கள். தேர் சரியான திசையில் சென்று நிலை நிறுத்தப்படவேண்டும். மீண்டும ஒலிக்க தொடங்கியுள்ள இந்த ‘சுயாட்சி’க் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.