![]() | ![]() |
காஷ்மீர் மாநிலத்தில் சோபியன் நகரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள கிராமம் மோகன்புரா. இந்த கிராமத்தில் ஆப்பிள் தோட்டத்தில் பஷிர் அகமது தார் (52), மனைவி, மகன், இரண்டு மகள்களுடன் வேலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு 28 கெனால் நிலம் சொந்தமாக உள்ளது. ( 1 கெனால் என்பது0.8 ஏக்கர்) அவர்கள் ஆப்பிளை பறித்து விற்பனைக்கு அனுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மோகன் புரா கிராமம் முழுவதும் நெல் வயல்களாக இருந்தது. 1980களில் நெல் வயலில் ஆப்பிள் தோட்டம் போட ஆரம்பித்தனர். நெல் பயிரிட்டு வந்த விவசாயிகள் ஒருவர் பின் ஒருவராக ஆப்பிள் தோட்டத்திற்கு மாறிவிட்டனர் என்று கூறுகின்றார் பஷிர் அகமது தார்.
இங்கு 2014–15ம் ஆண்டில் ஒரு ஹெக்டேருக்கு 3.98 டன் நெல் உற்பத்தியானது. சென்ற வருடம் ஒரு ஹெக்டேரில் 11.65 டன் ஆப்பிள் விளைந்துள்ளது. ஆப்பிள் மரங்கள் அதிக நெருக்கமாக இருப்பதால், வரும் ஆண்டுகளில் ஆப்பிள் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஜம்மு–காஷ்மீர் மாநில நில வருவாய் சட்டம் மற்றும் ஜம்மு–காஷ்மீர் விவசாய நில பயன்பாடு மாற்ற சட்டத்தின்படி விவசாய நிலத்தை வீட்டு மனையாகவோ, தோட்ட பயிர் செய்யயோ மாற்றக்கூடாது. இவ்வாறு சட்டம் இருந்தாலும், மோகன்புரா கிராமத்தில் நில பயன்பாட்டில் நெல் பயிரிடும் நிலமாகவே உள்ளது. நில பயன்பாடு ஆவணங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் உணவு உற்பத்தி குறித்து ஒவ்வொரு துறையிலும் உள்ள ஆவணங்களில் வெவ்வேறு மாதிரியாக கணக்கு உள்ளது. காஷ்மீர் டிவிஷனில் பட்காம் தவிர மற்ற மாவட்டங்களில் நெல் பயிரிடும் நிலங்கள் ஆப்பிள் தோட்டங்களாக மாற்றம் அடைந்திருப்பது கண்கூடாக தெரிகிறது.
ஜம்மு–காஷ்மீர் நுகர்வோர் விவகார துறை அமைச்சர் சவுத்ரி ஜூல்பிகர் அலி, “தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 7 லட்சத்து 51 ஆயிரம் டன் நெல் இறக்குமதி செய்துள்ளோம். அத்துடன் பல்வேறு திட்டங்களில் பல மாநிலங்களில் இருந்து 5 லட்சம் டன் நெல் இறக்குமதி செய்துள்ளோம். மாநில அரசு உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில்லை. உள்ளூர் விவசாயிகள் நெல்லை சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்கின்றனர். அல்லது வியாபாரிகளிடம் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர் என்று தெரிவித்தார். 2008ல் காஷ்மீர் டிவிஷனில் நெல் உற்பத்தி 5 லட்சம் டன்னாக இருந்தது. இது 2011–12ல் 5 லட்சத்து 61 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. இருப்பினும் ஜம்மு– காஷ்மீர் மாநிலத்தில் போதிய அளவு உணவு தானியம் கிடைக்கவில்லை. 2008ல் சுப்ரீம் கோர்ட் கமிஷனர் சமர்ப்பித்த அறிக்கையில், உணவு பாதுகாப்பு சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும்படி கூறியது. 1990--–91ம் ஆண்டு மாநிலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருந்தது. இது படிப்படியாக குறைந்து 2000–01ம் ஆண்டுகளில் பற்றாக்குறை 35 சதவிகிதமாக அதிகரித்தது. அதற்கு பிறகு தொடர்ந்து பற்றாக்குறை அதிகரித்த வண்ணம் உள்ளது.
நெல் உற்பத்தி குறைந்ததற்கு காரணம் பருவநிலை மாற்றத்தால் ஒரு போகம் மட்டுமே பயிரிட முடிகின்றது. இதனால் உற்பத்தி குறைந்துள்ளது என்று அதிகாரிகள் கருதுகின்றனர். 1950ல் ஷேக் அப்துல்லா அரசில் நில எஸ்டேட் ரத்து சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் நிலம் சிறிய அளவில் கூறுபோடப்பட்டது. கிராமப்புறங்களில் நெல் விவசாயத்திற்கு பதிலாக தோட்ட விவசாயத்திற்கு மாறினர். ஸ்ரீநகரை ஒட்டியுள்ள பகுதிகளில் நெல் வயல்களில் பெருமளவு கட்டிடங்கள் கட்டப்பட்டது. இவ்வாறு நெல் வயலில் வீடு கட்டியுள்ள தார் என்பவர் கூறுகையில், நாங்கள் நெல் பயிரிட்ட போது போதிய அளவு விளைச்சல் கிடைக்கவில்லை. இவர் இரண்டு மாடி வீடு கட்டியுள்ளார். இவரது உறவினர்களும் வீடு கட்டியிருப்பதாகவும் கூறுகின்றார்.
1950ல் நில சீர்திருத்த சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து காஷ்மீர் மாநிலத்தில் ஆப்பிள் தோட்டம் அமைப்பது தொடங்கியது. 1952ல் வடக்கு காஷ்மீரில் சோப்ரி பகுதியில் 12 ஆயிரம் ஹெக்டேரில் ஆப்பிள் தோட்டம் அமைக்கப்பட்டது. பத்து வருடத்திற்கு பிறகு அதாவது 1962ல் தோட்டக்கலைத் துறை தொடங்கப்பட்டது. 1982ல் ஷீர்–இ–காஷ்மீர் விவசாய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆப்பிள் தோட்டங்களாக மாறுவதற்கு ஊக்கமளித்தது. 2 லட்சத்து 19 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆப்பிள் தோட்டம் அமைக்கப்பட்டது. ஆப்பிள் உற்பத்தியில் 7 லட்சம் குடும்பத்தைச் சேர்ந்த 33 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.
![]() | ![]() |
1990ம் ஆண்டுகளில் 68,723 ஹெக்டேர் பரப்பில் ஆப்பிள் தோட்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இது 2016ல் 1 லட்சத்து 85 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இந்த வருடம் 17 லட்சம் டன் ஆப்பிள் விளைந்துள்ளது. தோட்டக்கலைத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி மன்சூர் அகமது பட், “ ஆப்பிள் விளைச்சல் பற்றிய கணக்கு மாறக்கூடியது. தெற்கு காஷ்மீரில் மூன்டா சோதனை சாவடியை கடந்து செல்லும் ஆப்பிள் ஏற்றிய லாரிகள் கணக்கிடப்படுகிறது. காஷ்மீரில் 7 லட்சம் பேர் ஆப்பிள் தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் நான்கு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பூச்சி கொல்லி மருந்து அடித்தல், ஆப்பிளை மரத்தில் இருந்து எடுத்தல், பேக்கிங் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
ஷீர்–இ–காஷ்மீர் விவசாய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சபீர் அகமது, “ ஆப்பிள் விவசாயிகள் போதிய குளிர்பதன கிடங்குகள் இல்லை என்று கூறுகின்றனர். சீசன் இல்லாத நேரங்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லாரிகளில் டில்லி உட்பட மற்ற மாநிலங்களுக்கு ஆப்பிள் கொண்டு செல்லப்படுகிறது. 4 லட்சத்து 80 ஆயிரம் ஆப்பிள் மரங்கள் உள்ளன. மொத்தம் 7 கோடி பழ மரங்கள் உள்ளன. 1 லட்சத்து 30 ஆயிரம் லாரிகள் மூலம் 8 கோடி பெட்டி ஆப்பிள்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றோம். இதன் மூலம் ரூ.8 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெறுகின்றது. இதில் உள்ள பிரச்னை தேவைக்கும்– விளைச்சலுக்கும் இடையே பற்றாக்குறை உள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக அளவு ஆப்பிள்கள் விற்பனைக்கு வரும். டில்லியில் உள்ள ஆஜாத்பூர் மண்டி, காஷ்மீரீல் உள்ள சோப்ரி பழ மண்டியில் அதிக அளவு விற்பனைக்கு வரும். அதிக அளவு விற்பனைக்கு ஆப்பிள்கள் குவிவதால், இதன் விலை சரிகின்றது என்று தெரிவித்தார். பாதுகாத்து வைத்திருந்து கோடை காலத்தில் விற்பனை செய்வதற்கு வசதியாக தேவையான அளவு குளிர்சாதன கிடங்குகள் இருந்தால், நல்ல விலை கிடைக்கும் என்று ஆப்பிள் விவசாயி தார் கூறுகின்றார்.
முன்பு சராசரியாக ஒரு கெனால் பரப்பில் 12 ஆப்பிள் மரங்கள் வளரும். 2016ல் மாநில அரசு மிக நெருக்கமாக வளரும் வகையில் ஆப்பிள் செடிகளை விவசாயிகளுக்கு கொடுத்துள்ளது. இவற்றை ஒரு கெனால் பரப்பில் 111 முதல் 116 வரை வளர்க்க முடியும். இந்த புதிய ரகம் ஒரு மரத்திற்கு சராசரியாக 25 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்.
இந்த புதிய ரகம் விளைச்சல் கொடுக்க தொடங்கும் போது காஷ்மீர் கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். “இந்த புதிய ரகத்தை விவசாயிகள் வளர்க்கும் போது, நாம் ஆப்பிள் உற்பத்தியில் அமெரிக்காவை முந்தி விடலாம்” என்று புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராஜ்புரா தோட்டக்கலை அதிகாரி நிசார் அகமது கனானி தெரிவித்தார்.
இந்த மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரும், இந்த மாற்றத்தால் பலன் கிடைக்கும் என்று கருதவில்லை. நெல் வயல்கள் எல்லாம் ஆப்பிள் தோட்டங்களாகவும், வீட்டு மனைகளாகவும் மாறினால், எதிர்காலத்தில் உணவு தானிய பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஷீர்–இ–காஷ்மீர் விவசாய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டீன் பேராசிரியர் பரூக் அகமது ஜாகி, “1950களில் ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் நில பயன்பாடு பற்றிய சட்டம் இருந்தது. இதன்படி நிலத்தின் பயன்பாட்டை மாற்றுவதும், நிலத்தை விற்பனை செய்வதும் கடினம். இதன் நோக்கம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைவதே. வேறு இடங்களில் இருந்து உணவு தானியங்களை கொண்டு வருவதற்கு போக்குவரத்து செலவும் அதிகமாகும்.
சரியாக திட்டமிடப்படாத காரணத்தால் பெருமளவு விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. கிராமப்புறங்களில் இருந்து ஸ்ரீநகரில் பெருமளவு மக்கள் குடியேற்றம், கடந்த 30 ஆண்டுகளில் மற்ற பகுதிகளும் நகரமயமாகி விட்டன. காஷ்மீரில் ஒவ்வொரு அங்குல நிலமும் விளைச்சல் நிலம். இதில் வீடுகள் கட்டுவது கவலையை அளிக்கிறது என்று அவர் கூறினார்.
ஆனால் விவசாய துறை இயக்குநர் சையத் அல்டாப் அஜாச் ஆன்டிராபி, “ விவசாயமும், தோட்டக்கலையும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. நாம் இதில் ஏதாவது ஒன்றை நிறுத்த முடியாது என்று கூறுகின்றார். பஞ்சாப் அதிக அளவு நெல் உற்பத்தி செய்கின்றது. இதை காஷ்மீர் இறக்குமதி செய்யலாம். இப்போது சாலை வசதி நன்றாக உள்ளது. ரயில்வே பாதையும் வரப்போகின்றது. நாம் உணவு பாதுகாப்பு பற்றி கவலைப்பட தேவையில்லை.
நமது பொருளாதாரத்தில் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஜம்மு–காஷ்மீர் அரசு அதிக விளைச்சல் கொடுக்கும் ஆப்பிள் ரகத்தை ஊக்குவிக்கின்றது. காஷ்மீரின் நெல் களஞ்சியம் என்று அழைக்கப்படும் தெற்கு காஷ்மீரில், விவசாய அமைச்சகம் அதிக விளைச்சல் கொடுக்கும் நெல் ரகத்தை ஊக்குவிக்கின்றது. ஆனால் விவசாயிகள் நெல் பயிரிட விரும்பவில்லை.
ஸ்ரீநகரில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் உள்ளது புர்காம் மாவட்டம். இந்த மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. இந்த மாவட்டத்தில் ஆப்பிள் தோட்டம் அமைக்க ஊக்கப்படுத்தியதுடன், அதற்கு வங்கிகளும் கடன் கொடுத்தன. இப்போது ஏழ்மையில் இருந்த புர்காம் மாவட்டம் செல்வச் செழிப்பான மாவட்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில் விவசாயிகள் ஆப்பிள் மர கன்று கிடைக்கவில்லை என்று புகார் கூறுகின்றனர்.
இது பற்றி தோட்டக்கலைத்துறை இயக்குநர் மல்கோத்ரா மசூம், “ அதிக ஆப்பிள் காய்க்கும் நவீன செடிகளை வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் எல்லா இடங்களிலும் கிடைக்கும். தோட்டக்கலைத்துறைக்கு கொள்கைகளை அறிவிக்க உள்ளோம். தோட்டக்கலைத்துறை பல்கலைக்கழகத்தையும் நிறுவ உள்ளோம். வரும் காலத்தில் கிராமப்புறங்களில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படப் போகின்றது என்பதை பார்க்க போகின்றீர்கள் என்று அவர் தெரிவித்தார்.
காஷ்மீரில் நெல் வயல்கள் ஆப்பிள் தோட்டங்களாக மாறுவது நல்லதே. ஆப்பிள் தோட்ட விவசாயத்தில்தான வருவாய் கிடைக்கின்றது. அரசை விட விவசாயிகளுக்கு இது பற்றி நன்கு தெரியும். ஆனால் விவசாய நிலங்களில் கட்டிடங்களை கட்ட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று விவசாய துறை இயக்குநர் சையத் அல்டாப் அஜாச் ஆன்டிராபி தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலத்தில் நெல் வயல்கள் ஆப்பிள் தோட்டங்களாக மாறிவிட்டன. இதனால் உணவு பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்று ஒரு சாரார் எச்சரிக்கின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே ஆப்பிள் தோட்டங்களை அமைக்க முடியும். அதற்கான மண் வளமும், சீதோஷ்ண நிலையும் காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே உள்ளது.
நஷ்டம், போதிய வருவாய் இல்லாத நெல் விவசாயத்தை விட, ஆப்பிள் தோட்டத்தில் வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கின்றது.
ஆப்பிள் பழங்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான குளிர்பதன கிடங்கிகள் அமைக்க வேண்டும். குளிர்சாதன வசதி உள்ள லாரி, டிரக்குகளை அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான் காஷ்மீர் மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பலன் கிடைக்கும்.
நன்றி:அவுட்லுக் வார இதழில் நசீர் கனாய்.