தீர்ப்புகள் கை கொடுக்குமா?

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2017

ஓராண்டு காலமாக தமிழக ஆட்சியும், ஆட்சிக் கட்சியான அதிமுகவும் பல்வேறு தொடர் பிரச்னைகளை சந்தித்து வருகின்றன.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா கிடைத்தது போல, அவரது மறைவுக்கு பிறகு ஆளுமைமிக்க தலைமை இல்லாததால்தான், அதிமுக இத்தனை பெரிய பின்னடைவை சந்தித்ததுடன் பல்வேறு சோதனைகளுக்கும் ஆளாகி வருகிறது. இந்த சோதனைகளின் விளைவாக ஆட்சியின் செயல்பாடுகள் முடங்கி கடப்பதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது வழியிலேயே ஆட்சியையும், கட்சியையும் பாதுகாப்பாக கொண்டுபோக, சசிகலா விரும்பினார். அவரது விருப்பம் நிறைவேறவில்லை. அதனால், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியையும் (இபிஎஸ்) கட்சிக்கு தினகரனையும் நியமித்தார் சசிகலா. சசிகலா சிறைக்குப் போனதும், எல்லாமே தலைகீழக மாறிப்போய்விட்டது.

எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கும், டிடிவி தினகரன் தலைமையில் இயங்கும் கட்சிக்கும் எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வம் 6 மாத காலம் தர்மயுத்தத்தை நடத்தி, தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு துணை முதல்வர் பொறுப்பையும், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியையும் வாங்கிக்கொண்டு, எதிர்ப்பு நிலையை கைவிட்டு விட்டார்.

எப்போதும் போல, தங்கள் கட்டுப்பாட்டில தான் எடப்பாடி உள்ளிட்ட அனைவரும் இருப்பார்கள் என நம்பிய தினகரனின் நம்பிக்கை பொய்த்துப்போனதால், அவர் இபிஎஸ், ஓபிஎஸ்க்கு எதிராக செயல்பட தொடங்கினார்.

அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என இரு பிரிவுகளாக செயல்பட்ட இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து, தினகரனுக்கு எதிராக தீவிரம் காட்டி வருகின்றனர். உண்மையான அதிமுக அம்மா அணி நாங்கள்தான் எனக் கூறிவரும் தினகரன், இபிஎஸ்ஸின் ஒரு குழுவோடு, ஓபிஎஸ் கோஷ்டி இணைந்திருக்கிறார்கள். இதை தொண்டர்கள் ஏற்கவில்லை என்று கூறி, இவர்கள் அனைவரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டு தலைமை நிலைய செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர், பொருளாளர் அமைப்பு செயலாளர்கள் உள்பட கிளைக்கழக நிர்வாகிகள் வரையிலும் புதியவர்களை நியமத்து வருகிறார்.

இணைந்த இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி, ஏற்கனவே சசிகலாவை பொதுச்செயலாளளராக நியமித்த தீர்மானம் ரத்து செய்யப்படுவதாகவும், அவர் எடுத்த கட்சி ரீதியான சேர்த்தல், நீக்கல் நடவடிக்கை எதுவும் செல்லாது என்றும் புதிய தீர்மானத்தை நிறைவேற்றி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

சசிகலாவால் நியமிக்கப்பட்ட தினகரனின் துணைப் பொதுச்செயலாளர் பதவியும் கட்சி விதிப்படி செல்லாது என்றும் எனவே, அவரது நடவடிக்கையும் செல்லத்தக்கதல்ல எனவும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளனர்.

அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி ஆகியவை இணைந்து நிறைவேற்றிய  தீர்மானங்களை ஏற்று, கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என இபிஎஸ் அணி தேர்தல் ஆணையத்தில் புதிதாக மனுச்செய்துள்ளது. இந்த மனுவில் தங்கள் பக்கம் அதிகபட்ச எம்.பி., எம்.எல்.ஏக்கள், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இருப்பதற்குரிய ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் உள்ள வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், நிச்சயம் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என இபிஎஸ் தரப்பு நம்புகிறது.

ஆனால், இபிஎஸ் தரப்பு நடத்தியது பொதுக்குழுவே அல்ல, அது வெறும் பொதுக்கூட்டம்தான். பொதுக்குழுவை கூட்டுவதற்கு சட்டப்படியும், கட்சி விதிப்படியும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. நாங்கள் மட்டுமே பொதுக்குழுவை கூட்டுவதற்குரிய அதிகாரம் படைத்தவர்கள் என தினகரன் தரப்பு கூறுகிறது. இது தொடர்பாக அவர்களும் தேர்தல் ஆணையத்திடம் பல ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர். 6–ம் தேதி தேர்தல் ஆணையம் இது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. இதில் இரண்டு கட்ட விசாரணை முடிந்து, வருகிற 9ம் தேதிக்கு சென்னை ஹைக்கோர்ட் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

மத்திய தேர்தல் ஆணையம், இபிஎஸ் அணியினர் சமர்ப்பித்துள்ள ஆவணங்களை ஏற்றுக்கொண்டு, கட்சியின் பெயரையும், சின்னத்தையும் வழங்கிவிட்டால், நிச்சயம் இவர்களின் கை ஓங்கும். தினகரன் அணியில் உள்ள பலரும் கூட இந்த பக்கம் வரக்கூடும்.

அதே போல, சபாநாயகர் அளித்த தகுதி நீக்க நடவடிக்கை செல்லும் என கோர்ட் தீர்ப்பளித்தால், மீதமுள்ள நான்கு ஆண்டுகள் இபிஎஸ் தலைமை யிலான ஆட்சியை ஆபத்தின்றி கொண்டு சென்றுவிடலாம்.

தினகரன் தரப்பு அளித்துள்ள ஆவணங்களை பரிசீலிக்கும் தேர்தல் ஆணையம் அவர்கள் தரப்பிலும் ஓரளவு நியாயம் இருப்பதாக கருதுமேயானால் மீண்டும் இரட்டை இலை முடக்கப்படவும் வாய்ப்பு உண்டு. கட்சி பெயரும் இரண்டு தரப்புக்கும் கிடைக்காத நிலை உருவாகும். அதே போல, கோர்ட் தீர்ப்பு, சபாநாய கரின் நடவடிக்கை செல்லாது என்று வருமேயானால் அது தினகரன் தரப்புக்கு சாதகமாகி அவரது கை ஓங்கும் நிலை ஏற்படும். ஆட்சிக்கும், கட்சிக்கும் மீண்டும் ஆபத்து தொடரும்.

இவர்களின் உட்கட்சி மோதல் ஒரு புறம் இருக்க, திமுகவும், இந்த ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டது. சட்டசபையை மீண்டும் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கேட்டு கோர்ட்டுக்கு சென்றுள்ளது இந்த வழக்கு விசாரணையும் 12ம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக ஆட்சியும், கட்சியும் என்ன ஆகும் என்பது கோர்ட் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பிற்கு பிறகுதான் தெரியவரும். இந்த தீர்ப்புகள் இபிஎஸ் அணிக்கு கை கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.