கட்டுமானத்தில் கலக்கும் ரோபோக்கள்

பதிவு செய்த நாள் : 26 செப்டம்பர் 2017

குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள் என புதிது புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன.  இந்தவகை கட்டுமானங்கள் பெரும்பாலும் செங்கற்களைக் கொண்டு கட்டப்படுகின்றன. இத்தகைய கட்டடங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.

தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பளம், உணவு என அதிக செலவுகள் ஆகும். மேலும் தொழிலாளர்கள் கையால் செய்யும் வேலையால் கட்டுமானத்தில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அதிக அளவில் கட்டுமானப் பொருட்கள் வீணாகும் வாய்ப்புகளும் உள்ளன.

இந்த செலவுகளை எல்லாம் கட்டுக்குள் கொண்டுவர, இந்த நவீன உலகில் பல தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் கட்டுமானப் பணியில் தானியங்கி ரோபோக்களும் தற்போது அறிமுகமாகம் செய்யப்பட்டுள்ளன.

சாம் ரோபோ

நியூயார்க்-ஐ சேர்ந்த கன்ஸ்டிரக்‌ஷன் ரோபோடிக்ஸ் என்னும் நிறுவனம் பில்டர் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது.

இதற்கு சாம் என்று பெயரும் சூட்டியுள்ளது. சாம் ரோபோக்கள் செங்கற்களைப் பயன்படுத்தும் கட்டுமானப் பணிகளை விரைந்து செய்யும். இது சராசரி மனிதர்களைக் காட்டிலும் 6 மடங்கு அதிவேகமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கொத்தனார் சராசரியாக ஒரு நாளில் 500 செங்கற்களை உபயோகித்து கட்டிடம் எழுப்புகிறார். இது கட்டுமானப் பணி குறித்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. ஆனால், சாம் ரோபோ ஒரு நாளில் 3,000 செங்கற்களை உபயோகித்து கட்டிடம் எழுப்பும். ஒரு சாம் ரோபோ 6 கொத்தனார்களின் வேலையை முடிக்கும்.

இந்த ரோபோக்களை கட்டுமானத்திற்கு உபயோகிப்பதால் கட்டுமானச் செலவுகள் பலமடங்கு குறையும். திட்டமிட்டபடி எந்தவித இடையூறுமின்றி வேலை தொடர்ந்து நடைபெறும்.

இந்த ரோபோக்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் கன்வேயர் பெல்ட்டில் செங்கற்களை தொழிலாளர்கள் அடுக்கி வைக்கவேண்டும். அவற்றை ரோபோக்கள் தானாக எடுத்து சிமெண்ட் கலவையை பூசி சுவரைக் கட்டத் துவங்குகின்றன. செங்கற்களுக்கு இடையே வெளியே தெரியும் சிமெண்ட் கலவைகளைச் சரியாக்கும் பணியில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபடவேண்டும். மேலும் கட்டுமான இடத்தை சம தளமாக்கும் வேலையை வேலையாட்கள்தான் செய்தாக வேண்டும். ஒவ்வொரு மூலையிலும் செங்கற்களை கட்டும் வேலையை மட்டும் தொழிலாளர்களே செய்யவேண்டும்.

நிறுவனங்களின் லோகோ போன்ற சின்னங்களை இந்த ரோபோக்களால் சுலபமாக கட்டுமான சுவர்களில் செய்யமுடியும். அந்தவகை சின்னங்களை, பிக்சல் வரைப்படங்களாக இந்த ரோபோக்களின் சென்சார்களில் பதிவு செய்துவிட்டால், எளிதில் அதனை செய்து முடிக்கும்.

அதனால் வீட்டின் முகப்புச் சுவர்களில் எலிவேஷன் என்றழைக்கப்படும் அழகுபடுத்தும் வேலைக்கு அதிகச் செலவாகிறது. அதற்கான திறமை உள்ள தொழிலாளர்களும் கிடைப்பது கஷ்டம். அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது சாம் ரோபோ.இந்த வேலைகளை அதனுடன் பொருத்தப்பட்ட சென்சாரின்மூலம் சாய்ந்த கோணங்கள், வேகம், நோக்குமுறை மற்றும் லேசர்கள் ஆகியவற்றை பகுத்தறிந்து அதற்கேட்ப விரைந்து செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டது சாம். ரோபோக்கள் பணி செய்யும் இடத்தின் இடது மற்றும் வலதுபக்கங்களின் இரு முனைகளிலும் லேசர்கள் பொறுத்தப்பட்டிருக்கும். இதன் உதவியோடு சரியான முறையில் கட்டுமான பணியைச் செய்து முடிக்கின்றன.

வேலையை எளிதாகவும், சரியாகவும் செய்யும் என்றாலும் இந்த ரோபோக்களின் செயல்களைக் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். வேலை முடிந்தவுடன் அதனை சுத்தம் செய்து பராமரித்து வருவது இன்றியமையாத ஒன்றாகும். இந்த ரோபோக்களை மட்டும் வைத்துக்கொண்டு தொழிலாளர்கள் இல்லாமல் கட்டுமானத்தை முடிக்க இது உருவாக்கப்படவில்லை. தொழிலாளர்களின் சிரமத்தை குறைத்து அவர்களுக்கு உதவும் வகையில் இந்த சாம் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. ரோபோவுடன் சேர்ந்து ஒரு தொழிலாளர் பணி செய்தால், 4 தொழிலாளர்களின் வேலையை எளிதில் முடிக்க முடியும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கா செலவிடும் தொகை 50 சதவீதமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரோபோக்கள் அமெரிக்காவில் பல பகுதிகளில் கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்துவரும் 2 வருடங்களில் இங்கிலாந்திலும் இந்த ரோபோக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இந்த சாம் ரோபோவின் விலை 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயில் பார்த்தால் இந்த ரோபோவின் விலை ரூ 32 கோடியே 38 லட்சத்து 5 ஆயிரம் ஆகும். இதன் விலை மிக அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறதா? ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பெரிய திட்டங்களில் சாம் பயன்படும். சாம் ரோபோவை விலைக்கு வாங்கி பெரிய நகரங்களில் வாடகைக்கு கொடுக்கலாம்.

ஹாட்ரியன் ரோபோ

சாம் ரோபோவில் உள்ள சில சிக்கல்களுக்கு தீர்வு கண்டு  ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஃபாஸ்ட் பிரிக் ரோபோடிக்ஸ் என்னும் நிறுவனம் ஹாட்ரியன் எக்ஸ் என்னும் ரோபோவை வடிவமைத்துள்ளது. இந்த வகையான ரோபோ, கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் வரைந்து, சோதனை  செய்து தரப்பட்ட கட்டுமான வரைப்படத்தினை மட்டும் வைத்துக்கொண்டு, முழு கட்டுமானத்தையும் துல்லியமாகக் கட்டி முடிக்கும் திறன்கொண்டது.

சாம் ரோபோவைக்காட்டிலும் பல மடங்கு வேகமாக பணியை முடித்துவிடும் இந்த ஹாட்ரியன் ரோபோ.

கட்டுமானத்தில் ஜன்னல்கள், கதவுகள் ஆகியவற்றை அமைக்கவேண்டிய இடத்தில் அதற்கு தகுந்தபடி சரியான அளவு இடம் ஒதுக்கப்பட்டு மீதமுள்ள கட்டுமானத்தை தொடர்ந்து நடத்தி முடிக்கும். உதாரணத்திற்கு ஒரு இடத்தில் கதவு வரவேண்டும் என்றால், அதற்கு தேவையான இடத்தை விட்டுவிட்டு அதற்கு மேல் ஒரு நீண்ட கான்கிரீட் பிளாக் ஒன்றை வைத்து, அதன்மேல் தொடர்ந்து செங்கற்களை கட்டும் பணியில் ஈடுபடும்.

கட்டுமான பணிகளை இந்த ரோபோ முடித்தவுடன் ஜன்னல்கள், கதவுகள், பிளம்பிங் மற்றும் மின் வேலைகள் ஆகியவற்றை பிறகு செய்துகொள்ளலாம். அதற்கேற்றவாறு கட்டப்பட்டிருக்கும். இதேபோல், தரையில் நமக்கு பிடித்தவாறு டைல்ஸ், பளிங்கு அல்லது சிமெண்ட் தரை போன்றவற்றை பின்னர் அமைத்துக்கொள்ளலாம். கட்டுமானப் பணியை மட்டும் இந்த ரோபோ செய்வதால், மற்ற வேலைப்பாடுகளை தொழிலாளர்கள் உதவியுடன் செய்து முடிக்கலாம்.

ஹாட்ரியன் ரோபோ ஒரு மணிநேரத்தில் 1,000 செங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யும். அதாவது 16 கொத்தனார்களின் வேலையை ஹாட்ரியன் ரோபோ முடித்துவிடும். கடந்த 2015ஆம் ஆண்டு முதன்முறையாக இந்த ஹாட்ரியன் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் 20 மீ சதுர கட்டுமான தளத்தை எளிதில் கட்டி முடித்தது. இந்த ஹாட்ரியன் ரோபோ, 4 படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டை 2 நாட்களிலேயே கட்டி முடிக்கும் திறன்வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரோபோக்கள் தற்போது தனி தரைதள வீடு கட்டுமான பணி செய்ய ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளை கட்ட ஏற்றவாறு வடிவமைக்கப்படவில்லை. இது ஒன்றுதான் இந்த ரோபோக்களில் உள்ள ஒரு பெரிய குறைபாடாகும்.

மனிதர்களின் உதவி இல்லாமல், ரோபோக்கள் மட்டுமே கட்டுமான வேலையை செய்ய இந்த ரோபோ கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரோபோவை உருவாக்க 10 வருடங்கள் ஆனது. மேலும் இதனை மேம்படுத்த 70 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவாயின. இந்த ரோபோவை இந்த ஆண்டு முடிவுக்குள் பெரும்பாலான நாடுகளில் அறிமுகம் செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஹாட்ரியன் ரோபோவின் விலை பற்றிய விபரம் இன்னும் கிடைக்கவில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் கட்டுமான வேலை வாய்ப்பை எந்த அளவு ஹாட்ரியன் ரோபோ பாதிக்கும் என்ற ஆய்வுகளும் அதன் அடிப்படையில் அறிவார்ந்த முடிவுகளும் அவசியம்.கட்டுரையாளர்: தினேஷ் குகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation