வேண்டாம் ப்ளு வேல் கேம்

பதிவு செய்த நாள் : 22 செப்டம்பர் 2017

தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வரும் கேம்  தான் ப்ளூ வேல். இந்த கேம் பற்றி  தெரிந்துகொள்ள பலரும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கட்டுரை.

விளையாட்டு என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் நிகழ்வு. தெளிவான கட்டமைப்பு விதிகளைக் கொண்ட  ஒரு செயற்பாடு. இது பழங்கதை. இது போன்ற கணினி விளையாட்டுகளால் மன அழுத்தம் குறையும். இதன் மூலம் சிறுவர்களின் படைப்பாற்றல் மேம்படும். தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன் வளரும், குழந்தைகளின் தன்னம்பிக்கை மேலோங்கி இருக்கும். பிரச்சினைகளைத் தீர்க்கவும், அறிவாற்றலை பெருக்கவும் கற்றுக் கொடுக்கும் வல்லமையுடன் இந்த விளயாட்டுகள் இருந்தன.

ஆனால், தற்போது கணினி தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததின் பயனாக, கணினி விளையாட்டுகளும் முன்னேறி வருகின்றன. மேலும் இணையம் மூலமாக ஆன்லைனில் விளையாடப்படும் விளையாட்டுகளும் தமது பங்கிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றன.
தொடக்கத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் கேம் ஆகியவற்றை விரும்பி விளையாடிய இளைஞர்கள் காலப்போக்கில் அதிரடி மற்றும் புலனாய்வு விளையாட்டுகளையும் விளையாட ஆரம்பித்தனர்.
இவ்விளையாட்டுகளைப் பெரும்பாலும் 12 முதல் 19 வயதுடைய சிறுவர், சிறுமியரே அதிகம் விரும்பி விளையாடுகின்றனர்.

மனித பயன்பாட்டிலுள்ள கஷ்டங்களைப் போக்குவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் நம்மை அடிமைப்படுத்திக் கொண்டு வருகின்றன.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகளும் அதன் பயன்பாடுகளும் இளம் தலைமுறையினரை அடிமையாக்கி விடுகிறது. இந்த அடிமை நிலை கல்வி, சமூகத்தில் ஒரு அங்கமாக நம்மை பிணைத்துக் கொள்ளுதல், நாம் வாழும் சமுக உறுப்பினர்களுக்கு உதவுதல், மக்களுடன் களங்கமின்றி இணைந்து பழகுதல் ஆகிய நடவடிக்கைகளில் இருந்து நம்மை விலக்கிவைக்கிறது.
முதலில் ஸ்னேக் கேம், விடியோ கேம், கார்டு கேம், கேண்டி கிரஷ், வைஸ் சிட்டி என பல வகையான கணினி மற்றும் ஆன்லைன் கேம்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இது போன்ற விளையாட்டுகள் உங்களை அடிமையாக்கும். பின் நாளடைவில் உங்கள் பொறுமையை இழக்கச் செய்துவிடும், வெளியுலகத்தை மறக்கச் செய்யும், உடலின் ஆரோக்கியம் குறையும், மேலும் கண் பார்வை குன்றிவிடும்.
இது போன்ற ஒரு அடிக்ஷன் தான் இந்த "ப்ளூ வேல் சேலஞ்” விளையாட்டு.

ப்ளூ வேல் என்றால் என்ன

ப்ளூ வேல் விளையாட்டு (Blue Whale Game)  "ப்ளூ வேல் சேலஞ்" என்றும் அழைக்கப்படுகிறது. இணையத்தில் ஆன்லைனில் ஆடப்படும் ஒரு விளையாட்டு.  இந்த விளையாட்டு பற்றி மிகவும் குறைவான தகவல்களே உலகுக்குத் தெரியும். இந்த விளையாட்டுகளில் சிக்கி உயிரை இழக்காமல் மீண்டவர்கள் இந்த விளையாட்டு பற்றி போலீஸ் விசாரணையில தெரிவித்த தகவல்கள் மட்டும்தான் நமக்குத் தெரியும்.

இந்த விளையாட்டுகளும் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு விதிகள் மாற்றப்படலாம். இந்த ப்ளூ வேல் விளையாட்டின் தனி நபருக்கான கேம் 50 நாள்களில் முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. விளையாடுபவர்கள் அட்மினிஸ்ட்ரேட்டர் ஒதுக்கும் பணிகளைத் தொடர்ந்து செய்யவேண்டும். இறுதி சவால் என்பது விளையாடுபவர் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதாகும். ப்ளூ வேல்  இந்த விளையாட்டின் பெயர். கடலில் இருந்து கரைக்கு வந்து தற்கொலை செய்துகொள்ளும் கடற் திமிங்கலங்களின் நிகழ்வுகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.

இந்த விளையாட்டு 2013 இல் ரஷ்யாவில் சமூக வலைதளத்தின் "இறப்புக் குழு" என்று அழைக்கப்படுபவர்களின் பெயர்களில் ஒன்றான "F57" உடன் தொடங்கியது. இந்த விளையாட்டால் 2015 இல் முதல் தற்கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் உளவியல் மாணவரான பிலிப் புட்க்கின் என்பவர் இந்த விளையாட்டைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

இந்த ப்ளூ வேல் கேமை நாம் வாட்ஸ் ஆப், பேஸ் புக்,  மூலமாக டவுன்லோடு செய்ய முடியது. விண்ணப்பித்தோ, சாப்ட்வேர் மூலமாக கூட இதை விளையாட முடியாது. 

இந்த விளையாட்டின்  அட்மினிஸ்ட்ரேட்டர் தான் ஒருவரை தேர்தேடுத்து அவருக்கு அழைப்பு விடுத்து விளையாட்டை டவுன்லோடு செய்ய வைப்பார்கள். ஆனால் விளையாடுகிறவரை எவ்வாறு தேர்வு செய்து அழைப்பு விடுப்பார்கள் என்றுதான் இதுவரை தெரியவில்லை. இவர்கள் சமூக இணையதளத்தில் ரகசிய குழுக்கள் மூலமாக நமக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்புவார்கள். அதற்கு விளையாடுபவர்களின் சம்மதம் முக்கியம். அதனை ஒப்புக் கொண்டால் அவர்கள் தரும் அனைத்து டாஸ்க் எல்லாம் செய்ய வேண்டும். விளையாட்டின் நடுவில் இருந்து பின் வாங்க கூடாது என்பதுதான் உடன்பாடு. அதன் பிறகு விளையாட்டு ஆரம்பம் ஆகும்.

இந்த விளையாட்டின் விபரீதம் தெரிந்து பல நாடுகளில் முன்னரே தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இந்த விளையாட்டு  நுழைந்து  இளம் தலைமுறையினரை சைக்கோவாக்கி கடைசியில் தற்கொலைக்கும் கொண்டு செல்கிறது.  இந்தக் குழுவின் நோக்கம் இளைஞர்களை ஈர்ப்பது மட்டுமல்ல, அவர்களது மன ஆரோக்கியத்தில் சீரழிவை ஏற்படுத்தும் விளைவுகளை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த விளையாட்டை குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் இணையதள பயன்பாட்டை ஹேக் செய்து ஆன்லைனில் விளையாடும்படி அவர்களைத் தூண்டி விடுகின்றனர்.

இந்த ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என சமீபத்தில் பலர் தற்கொலை செய்துகொண்டனர். இதுவரை உலகம் முழுவதும் இந்த விளையாட்டு சுமார் 130 சிறுவர்கள், இளைஞர்களின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் சில திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளது.

இந்த ப்ளூ வேல் கேம் குறிப்பிட்ட, அந்த நபர், அதை பதிவிறக்கம் செய்த பிறகு அடுத்த சில நெடிகளில் அந்த ஸ்மார்ட் போன் அல்லது கணினி மூலம் பயன்படுத்தும் நபரின் விவரங்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் விவரங்கள், புகைப்படம், வீடியோ, அனைத்தும் ப்ளூ வேல் அட்மின் மூலம் திருடப்படும்.  குறிப்பாக இரவு நேரத்தில் இணையதளத்தை பயனபடுத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தான் இவர்களுடைய முதல் இலக்காக கொண்டு உள்ளனர். ஹேக்கிங் மூலம் அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திருடி அவர்களை மிரட்டுவதற்கான ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர் இந்த ப்ளூ வேல். அட்மினிஸ்டேஷன்.

இதையடுத்து உங்களை இந்த விளையாட்டில் ஈடுப்படுத்துவார்கள். இந்த விளையாட்டு மொத்தம் 50 நாள் டாஸ்க். தினமும் ஒரு டாஸ்க் அதை செய்து முடித்து இணைய தளத்தில் பதிவேற்றம் வேண்டும். முதல் நாள் டாஸ் மிக எளிமையாக இருக்கும். நாம் அதனை தொடர்ந்து விளையாடும் போது நம்மை அறியாமல் நாம் அதற்கு அடிக்ட் ஆகி விடுவேம். நாட்கள் செல்ல செல்ல டாஸ்க்குகள் கடினமாக இருக்கும்.

இந்த 50 நாள் டாஸ்கில் முதலில் சாதாரணமாக தனியாக திகில் மற்றும் சைக்கோ பாடங்கள் பார்க்க வேண்டும், உயரமான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்து அனுப்புதல், சுடுகாட்டிற்கு நள்ளிரவில் தனியாகச் செல்லுதல் என்று துவங்கும் இந்த பட்டியலானது, உடலில் ரத்த காயங்களை உண்டாக்கி கொள்ளுதல், கத்தியால் கையை தன்னை தானே குத்திக் கொள்ளுதல், கத்தியால் திமிங்கிலத்தின் படத்தினை கையில் வரைதல் என அவர்கள் கட்டாயப்படுத்துவர்கள். பின் இதுவே வலுவடைந்து இறுதியாக ஐம்பதாவது டாஸ்க்காக உங்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவதில் முடியும்.

இந்நிலையில் நாம் இந்த டாஸ்க்கில் இருந்து பாதியில் சென்றுவிடலாம் என்று நினைத்தால் உங்கள் வீட்டு தொலைபேசிக்கு அழைத்து உங்களை மிரட்டுவார்கள். பின் உங்கள் ரகசிய தகவல்கள் வெளியாகி விடும். மேலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை நாங்கள் கொன்று விடுவேம் என்று எல்லாம் மிரட்டி வருவார்கள். அதனால் நாம் அதற்கு அஞ்சி வேறுவழி எதுவும் இல்லாமல் அந்த விளையாட்டை தொடர்ந்து விளையாவோம். அந்த டாஸ்கின் 50-வது நாளான்று உயரமான கட்டிடத்தில் இருந்து குதிப்பது அல்லது தூக்கிட்டுக் கொள்வது என இரண்டில் ஒன்றை செய்துவிட்டு இந்த விளையாட்டில் இருந்து வெளியேறலாம். இதனால் ஒரு பயனும் இல்லை.

உலகமெங்கும் இதுவரை இந்த விளையாட்டினை விளையாடி 130-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த விளையாட்டு நாடு முழுவதும் பீதியை கிளப்பி வருகிறது.
இந்த ப்ளூ வேல் விளையாட்டு எப்படி, எந்த வகையில் இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது என இதுவரை போலீசார் உறுதிப்படுத்த வில்லை. தற்கொலை செய்துகொண்ட சில குழந்தைகளின் பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது  இந்த விளையாட்டின் தூண்டுதலால் தான் எங்கள் பிள்ளைகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்

இந்த விளையாட்டு பற்றி இன்னும் பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. உறுதி செய்யப்படாத செய்திகளும் ஏராளமாக உலா வருகின்றன.

பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றம்

ப்ளூ வேல் கேம் விளையாடும் இளைஞர்களிடம் திடீரென ஏற்படும் மாற்றங்கள்: தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து விலகிச் செல்வது, சோகமாக இருப்பது, அடிக்கடி கோபம், வழக்கமாக செய்யும் செயல்களில் ஆர்வம் குறைவு, நள்ளிரவு சுற்றித் திரிவது, இணையதளத்தில் அதிக நேரம் செலவிடுவது, தங்கள் செயல்பாடுகளை ரகசியமாக வைத்திருப்பது. இச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை கூர்ந்து கவனித்து பின்பற்றினால் நாம் ப்ளூ வேல் கேம் விளையாடும் இளைஞர்களைக் கண்டுபிடிக்கலாம். மேலும் உடலில் திடீர் காயங்கள் இருந்தாலும், வேறு ஏதும் மாற்றங்கள் இருந்தாலும் ப்ளூ வேல் விளையாட்டின் அறிகுறியாகக் கருத வாய்ப்புண்டு..

பெற்றோர் கடமை 

ப்ளூ வேல் கேமில் இருந்து தங்களது பிள்ளைகளைக் காப்பாற்ற, அவர்களின் சமூக வலைதளச் செயல்பாடுகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு வரும் குறுஞ்செய்திகள், அழைப்புகள், ஸ்நாப்சாட், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். தேவையற்ற அப்ளிகேஷனைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் மனஅழுத்தத்துடன் இருக்கிறார்களா என்று கண்டறிய வேண்டும். முக்கியமாக பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுவதுடன், வெளி விளையாட்டுகளில் அவர்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும்.

தடை செய்ய அரசு நடவடிக்கை:
இந்த விளையாட்டை உயர்நீதிமன்றங்களும், மாநில அரசுகளும் மற்றும் அதிகாரிகளும் தடை செய்ய வேண்டுமென்று சொல்கிறார்கள். ஆனால் தடை செய்வதற்கு என்ன வகையான திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை இன்னும் விளக்கவில்லை. மேலும் கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட நிறுவனங்கள் ப்ளு வேல் விளையாட்டுடன் தொடர்புடைய தளங்கள், குழுக்கள், இணைப்புகள் போன்றவற்றை நீக்கவேண்டும் என இந்திய அரசு கூறியிருக்கிறது. ஆனால் அதை எப்படிச் செய்ய முடியும் என்பது விளக்கப்படவில்லை.

ப்ளூ வேல் விளையாட்டின் தீமைகள் குறித்து தங்களது மாணவர்களுக்கு பல பள்ளிகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் தேவை. கல்லூரி, தொழில் கல்வி நிலையங்களின்  மாணவர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இது போன்ற சிக்கலில் யார் மாட்டிக்கொண்டாலும் போலீசாருக்கு உடனடியாக தகவலை தெரிவித்துவிடுவது அவசியம். இதன் மூலம் ஓர் உயிரைக் காக்க ஒரு வழி பிறக்கும்.  


கட்டுரையாளர்: முத்துலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation