ஆளும் வளரனும், அறிவும் வளரனும், அதுதாண்டா வளர்ச்சி!

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2017

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது பெற்றோர் மனதில் ஏற்படும் கனவுகள், எதிர்பார்ப்புகள் ஏராளம். குழந்தைகள் சிறந்த கல்வி பெறவேண்டும் என பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகள் கணக்கில் அடங்காது. ஆனால் குழந்தைகளின் கல்விக்கு காட்டும் அக்கறை அவர்களின் ஆரோக்கியத்தின் மீது எந்த அளவு காட்டப்படுகிறது?

நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் 5 – 14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள் ஆவர். குழந்தைகளின் பள்ளிப்பருவத்தை இருவகையாக பிரிக்கலாம். 5 முதல் 11 வயது வரை ஆரம்ப பள்ளி வயது. 12 முதல் 17 வயது வரை மேல்நிலை பள்ளி வயது.

குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியின் மிக முக்கியமான கட்டம் 5 முதல் 11 வயது வரையிலான ஆரம்ப பள்ளி பருவம். எனவே  இந்த காலக்கட்டத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் சீராக இருப்பது மிகவும் முக்கியம். அவர்களின் ஆரோக்கியம் சீராக இருந்தால் மட்டுமே அவரகள் மனதளவிலும் உடலளவிலும் சிறந்த வளர்ச்சியை பெறமுடியும்.

ஆரம்ப பள்ளி செல்லும் பருவத்தில் குழந்தைகளின் எடை கணிசமாக அதிகரிக்க வேண்டும். ஆண்டுக்கு இரண்டு கிலோகிராம் எடை அதிகரிக்க வேண்டும். 5 முதல் 11 வயதில் ஆண் குழந்தைகளுக்கு குறைந்தப்பட்சம் 18 முதல் 37 கிலோ எடையும்,  உயரம் 110 முதல் 142 செ.மீட்டர் இருக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு குறைந்தப்பட்சம் 17 முதல் 33 கிலோ எடையும் 108 முதல் 140 செ. மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.

ஆனால் நம் நாட்டில் தீவிரமாக இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனை குழந்தைகளுக்கு மிக பெரிய சாபக்கேடாக உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடால் வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு பற்சிதைவு, கேட்கும்திறன் பாதிப்பு, சரும பிரச்சனைகள், கவனக்குறைவு, மந்தபுத்தி, ஞாபகத்திறன் குறைவது போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

கல்வி பயிலும் வயதில் சிறந்த அறிவாற்றல், அதிக கவனம், நல்ல செயல்திறன் ஆகியவை தேவை. ஆனால் சரியாக சாப்பிடாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆற்றல்கள் குறைவாகவே இருக்கும். இது அவர்களின் கல்வியை பாதித்து எதிர்கால வாழ்வை சீர்குலைக்கும்.

அதுவும் கல்வியை வியாபாரமாகவும், குதிரை பந்தயமாகவும் பார்க்கும் இந்த காலக்கட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடால் ஏற்படும் பாதிப்பு குழந்தைகளுக்கு தேவையற்ற மன உளைச்சலை அளிக்கும். அது மனரீதியான பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

பெற்றோர்கள் கவனத்திற்கு

முதன் முதலாக பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் பலர் குழந்தைகள் மேல் தங்கள் எதிர்பார்ப்புகளை திணிப்பதில் காட்டும் ஆர்வம் அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவை கொடுப்பதில் இருப்பதில்லை. மேலும் பலர் குழந்தைகளின் மனரீதியான, உடல் ரீதியான தேவைகள் மற்றும் மாற்றங்களை புரிந்துகொள்ள தவறுகிறார்கள்.

புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் புதிய சூழலுக்கு பழக சிறிது காலம் ஆகும் என்பதை பெற்றோர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணவு பழக்கவழக்கம் உட்பட அனைத்திலும் பல மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றத்திற்கு பழக குழந்தைகளுக்கு சிறிது அவகாசம் தேவைப்படும். எனவே இந்த காலக்கட்டத்தில் பெற்றோர் குழந்தைகளை மிகவும் பொறுமையாக கையாளவேண்டும்.

பள்ளி பருவ குழந்தைகளின் வயதுடன் அவர்களின் அடம்பிடிக்கும் குணமும் அதிகரிக்கும். முக்கியமாக உணவு விஷயத்தில் மிகவும் அதிகமாகும். குழந்தைகள் வீட்டில் சாவகாசமாக சாப்பிட்டு கொண்டிருந்த காலம் மாறி அவசர அவசரமாக நேரத்திற்குள் சாப்பிட்டு பள்ளிக்கு செல்ல வேண்டும். மேலும் புதிய மனிதர்கள், புதிய நண்பர்கள், புதிய பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அவர்கள் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

இந்த மாற்றங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு சிறிது கடினமாக இருக்கும். பயத்தையும் பல குழப்பங்களையும் ஏற்படுத்தும். அதனால் அவர்களின் உடல் எடையில் மாற்றம் ஏற்படும். பொதுவாகவே முதல் முறையாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எடை குறைய ஆரம்பிக்கும். அதற்கு முக்கிய காரணம் சூழ்நிலை மற்றும் பழக்கவழக்கங்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள் தான்.
இதை பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனால் பள்ளிக்கு நேரத்திற்குள் சென்று விட வேண்டும் என்று சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு குறைந்த அளவு உணவை கொடுத்து பள்ளிக்கு அனுப்ப கூடாது

காலை உணவு கட்டாயம்

பல பெற்றோர்கள் குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள் நேரத்தை காரணம் காட்டி குழந்தைகளுக்கு சரியாக காலை உணவை தாங்களே கொடுக்காமல் விடுவது தற்போது அதிகரித்து வருகிறது.

குழந்தை காலையில் சாப்பிடவில்லை என்றால் என்ன? அதான் சிற்றுண்டி கொடுத்துள்ளேனே என்பதும் காலையில் குழந்தைக்கு ஒரு டம்ளர் பால் கொடுத்தேனே எனவும் பலர் சமாதானம் கூறுவதும் வாடிக்கையாகி வருகிறது.

நம் நாட்டில் நேரத்தை காரணம் காட்டி குழந்தைகள் காலை உணவை தவிர்ப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அப்படியே காலை உணவை சாப்பிட்டாலும் அது ஆரோக்கியமான சரிவிகித உணவுதானா என்பது சந்தேகமே.

நம் அனைவருக்கும் காலை உணவு மிகவும் முக்கியம். இரவு உணவுக்கு பின் பல மணி நேர இடைவெளிக்கு பின் நாம் சாப்பிடும் உணவு அது. அதனால் தான் தான் ஆங்கிலத்தில் அதை பிரேக்ஃபாஸ்ட் (Breakfast) அதாவது பல மணிநேர விரதத்தை முடிக்கும் உணவு என காலை உணவை குறிப்பிடுகிறார்கள்.

அந்த சமயத்தில் நம் வயிற்றில் அமில சுரப்பு அதிகமாக இருக்கும். அப்போது நாம் சாப்பிடும் உணவு நன்கு ஜீரணமாகி உடலுக்கு வலுசேர்க்கும். அதனால் காலை உணவு நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அத்தியாவசியம். அதனால் தான் காலை உணவு ராஜ உணவு என பெரியவர்கள் கூறுவர்.
அத்தகைய காலை உணவு நல்ல திடமான அரோக்கியமான உணவாக இருக்க வேண்டியது அவசியம். துரித உணவுகளோ அல்லது வெறும் பழங்கள் அல்லது பால், கஞ்சி போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. இட்லி, தோசை சாம்பார், சட்னி, பொங்கல், சப்பாத்தி, ராகி அடை, தினை உப்புமா போன்ற வகை வகையான உணவு வகைகளை சாப்பிட பெற்றோர் பழக்க வேண்டும்

.அப்போது தான் குழந்தைகள் நாள் முழுவதும் நல அறிவாற்றலுடன் உற்சாகமாக செயல்படுவார்கள். அதை விட்டு காலை உணவை குழந்தைகளுக்கு கொடுக்க தவறினால் அது குழந்தைகளை சோர்வடைய செய்யும். அதன் காரணமாக குழந்தைகளால் பாடத்தில் சரியாக கவனம் செலுத்த முடியாது. குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதால் பள்ளியில் ஆசிரியர்கள் தரும் நெருக்கடி, அதனால் வீட்டில் ஏற்படும் மனஅழுத்தம், வகுப்பில் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை என அனைத்தும் சேர்ந்து குழந்தைகளை உடலளவிலும் மனதளவிலும் மிகவும் பாதிக்கும். எனவே பொருளாதார பிரச்சனை இருந்தாலும் முடிந்த அளவு குழந்தைகள் காலையில் நல்ல உணவை சாப்பிட்டு பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

வீட்டில் கற்பிக்கவேண்டிய உணவுகல்வி

பள்ளி பருவத்தில் குழந்தைகள் கேள்வி கேட்பதிலும் புதிய விஷயங்களை கற்பதிலும் ஆர்வமாக இருப்பர். அதனால் பெற்றோர்கள் தங்களால் இயன்ற அளவு குழந்தைகளுக்கு பல நல்ல தகவல்களை சொல்லி கொடுக்க வேண்டும். முக்கியமாக உணவின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

உணவின் மேல் குழந்தைகளுக்கு அக்கறையும் ஆர்வமும் அதிகரிக்க பெற்றோர் உணவு குறித்து பல விஷயங்கள் பேச வேண்டும். குழந்தைகளை காய்கறி வாங்க செல்லும் போது உடன் அழைத்து செல்லலாம். அங்கு காய்கறிகளை காட்டி அவற்றை பற்றி குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால் அவற்றின் மீது குழந்தைகளின் ஆர்வம் அதிகரிக்கும்.
அதேப்போல் அனைத்து உணவு பொருட்கள் குறித்தும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகளுக்கு காய்கறி உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிடுவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

பெற்றோரின் விழிப்புணர்வு 

வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை அளித்து அவர்களின் எதிர்கால நலனை காப்பது பெற்றோரின் கடமை. அதற்கு உணவு குறித்த விழிப்புணர்வை பெற்றோர் அறிந்திருப்பது அவசியம்.

இன்றைய சூழ்நிலையில் டீவி சீரியல், பணிசுமை என பல காரணங்களை காட்டி குழந்தைகளிடம் பேச மறந்து வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை பொருளாதார ஏற்றதாழ்வை மீறி தற்போது அதிகரித்து வருகிறது. அதனால் குழந்தைகளின் நலன் மிகவும் கேள்விகுரியாகியுள்ளது.

அதனால் படித்தவர்கள் படிக்காதவர்கள், ஏழை, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்ற எந்த பாகுபாடின்றி அனைத்து வகை குடும்பங்களிலும் தற்போது குழந்தைகள் பலவித உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

எனவே குழந்தைகள் மீது பெற்றோர்களுக்கு பல எதிர்பார்ப்புகள் இருப்பது போல் குழந்தைகளுக்கும் பெற்றவர்கள் மீது பல எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதை பெற்றோர் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தைகளின் உடல் மற்றும் மனநலனை பேணி பாதுகாக்க முடியும்.
ஆரம்ப பள்ளி பருவத்தில் பல குழந்தைகள் டிவி விளம்பரங்கள், நண்பர்கள், உறவினர்கள், சில சமயம் ஆசிரியர்கள் மூலமாக சாப்பாடு குறித்த தவறான கருத்துகளை கேட்க வாய்ப்புகள் அதிகம். அதனால் சாப்பிடுவது குறித்து மன ரீதியான பயம், குழப்பம் ஏற்படும்.

அதை கவனிக்காமல் விட்டு விட்டால் அனோரெக்சியா ( உடல் எடை குறித்த தீவிரமான பயம்) புலிமியா (கிடைப்பதை சாப்பிட்டு பின் அதை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது) போன்ற மனரீதியான பிரச்சனைகள் உருவாகலாம். அதனால் உடல்நிலை மிகவும் மோசமடையும். இதை தவிர்க்க பிள்ளைகளின் உணவு பழக்க வழக்கத்தை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

குழந்தைகளின் பழக்கவழக்கங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது குறித்து குழந்தைகளிடம் அமைதியாக பேசி தெரிந்துகொண்டு தக்க ஆலோசனை வழங்க வேண்டும். அதற்கு முன்பு குழந்தைகளிடம் பெற்றோர் தினமும் பல விஷயங்களை மனம் விட்டு பேசி குழந்தைகளிடம் சகஜமான உறவை வளர்த்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்களால் உதவ முடியாத பட்சத்தில் உணவு நிபுணர்களிடமோ அல்லது மனநல அலோசகரிடமோ அழைத்து சென்று ஆலோசனை பெறலாம். இதில் வெட்கப்படவோ அவமானப்படவோ எதுவுமில்லை. குழந்தைகளின் நலனை பிரதானமாக கொண்டு தேவையற்ற தயக்கத்தை பெற்றோர் புறக்கணிக்க வேண்டியது அவசியம்.கட்டுரையாளர்: நிரஞ்சனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation