புதுப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டதாக கைதான ‘தமிழ்கன் இன்’ இணையதள உரிமையாளர் சிறையில் அடைப்பு

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 07:36

சென்னை: புதிய படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக வந்த புகாரின் பேரில் கைதான தமிழ்கன் இணையதள உரிமையாளரை வீடியோ பைரசி போலீசார் கைது செய்து கோர்ட் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் ஆகிய இணையதளங்களில் கடந்த பல ஆண்டுகளாக புதிதாக ரீலீஸ் ஆகும் படங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன. இது சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி பலர் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்காமல் ஆன்லைனிலேயே இலவசமாக பார்த்து விடுகின்றனர். இது போன்று சட்டவிரோதமாக படங்களை தடுக்கும் வகையில் நடிகர் விஷால் ஒரு தனிப்படை ஒன்றை அமைத்து கண்காணித்து வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்கன் இணையதளத்தை நடத்தி வந்த கவுரி சங்கர் என்ற நபர் பிடிபட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:– சென்னை அண்ணாசாலை, தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகி ராஜசேகரன் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘நான் தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் திருட்டு வீடியோ விநியோகத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் குழுவில் உள்ளேன். வேலூர், திருப்பத்துாரைச் சேர்ந்த கவுரிசங்கர் வெங்கடேசன் என்பவர் ‘தமிழ்கன் இன்’ என்ற இணையதள சேவையை துவக்கி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். அவர் மேலும் பல இணையதள முகவரிகளின் மூலம் அவ்வப்போது வெளிவரும் புதுப்படங்களை தொடர்ந்து இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டு வருவது தெரியவந்தது. இதனால் அவரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தோம். அவரிடம் புதுப்படங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்பது போல பேசி அதற்கு ரூ. பத்தாயிரம் தருவவதாக கூறி நைசாக பேசினோம். அவரை சென்னை திருவல்லிக்கேணிக்கு வரும்படி அழைத்தோம். அதன்படி அவர் கடந்த 12ம் தேதியன்று அண்ணாசாலையில் உள்ள பிலால் மூவிஸ் அலுவலகத்துக்கு வந்தார். சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டதாக விவேகம், மீசைய முறுக்கு, விக்ரம் வேதா ஆகிய 3 படங்களின் திருட்டு வீடியோ பிரிண்டுகளை தனது லேப்டாப்பில் போட்டு காண்பித்தார். தன்னிடம் உள்ள பிரிண்டுகள் நல்ல தரமானது என கூறினார்.

இதனையடுத்து அவரை எங்கள் தனிப்படை நிர்வாகிகள் மணிமாறன், கமலகண்ணன் ஆகியோர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்துக் கொண்டோம். அவரிடம் நாங்கள் சினிமா தயாரிப்பாளர் சங்க திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவினர் என கூறியதும் அவர் அதிர்ச்சியடைந்தார்.  அவரிடம் இருந்து பென் டிரைவ்கள், புதுப்பட வீடியோக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இது குறித்து உடனடியாக திருவல்லிக்கேணி போலீசாரிடம் விவரத்தை கூறி அவரை அங்கு ஒப்படைத்தோம். கடந்த பல ஆண்டுகளாக புதுப்படங்களை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்ட கவுரி சங்கர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். இதன் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிடிபட்ட தமிழ்கன் இன் இணையதள உரிமையாளர் கவுரிசங்கர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கவுரிசங்கர் தமிழ்கன் இன் டாட்காமில் புதுப்படங்களை சட்டவிரோதமாக வெளியிட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் நேற்று மாலையில் அடைத்தனர்.