துவங்கியாச்சு அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் * கொட்டும் மழையில் பாய், தலையணையுடன் திரண்டனர்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 07:33

நாகர்கோவில்: அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நேற்று துவங்கியது.

ஊதிய முரண்பாடுகளை களைந்து ஆறாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஆறாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்தும் வரை 2016 ஜனவரி 1ம் தேதி முதல் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. போராட்ட துவக்க நாளில் மறியல் போராட்டம்,  ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடந்தது.  இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்  நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். நேற்று அடிக்கடி மழை பெய்துகொண்டிருந்தபோதும் சுமார் 400 பெண் ஊழியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆண் ஊழியர்களும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடை பிடித்தபடி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்திலும் விடிய விடிய காத்திருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக சில ஊழியர்கள் தலையணை, பாய் உள்ளிட்டவைகளை கொண்டுவந்தனர். மேலும் கலெக்டர் அலுவலக சுற்றுப்புற பாதை முழுவதும் ஊழியர்கள் குவிந்திருந்ததால் வாகனங்கள் செல்லமுடியாமல் திணறின. காத்திருப்பு போராட்டம் இன்றும் தொடர்வதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.  நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க., காங்., நிர்வாகிகள் அரசு ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அரசு ஊழியர்கள் கைது:

ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நடக்கும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் ஒருபகுதியாக கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இரவு முழுவதும் காத்திருக்கும் போராட்டம் நடத்த தயாராக அரசு ஊழியர்கள் வந்திருந்தனர். மேலும் ஊழியர்கள் இரவு தங்கியிருக்க வசதியாக ஷாமியான பந்தல் அமைக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்களை போலீசார் திடீரென கைது செய்தனர். சுமார் 600 ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட நிலையில் சுமார் 300 ஊழியர்களே கைதானார்கள்.