மூதாட்டி ஸ்மார்ட் கார்டில் நடிகை காஜல் அகர்வால்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 07:18

சேலம்: அதிகாரிகள் குளறுபடியால் நடிகை காஜல்அகர்வாலின் படத்துடன் சேலம் அருகே மூதாட்டி ஒருவருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. விநியோகிக்கப்படும் கார்டுகளில் பல குளறுபடிகள் உள்ளது. குறிப்பாக குடும்பத்தலைவர், போட்டோக்கள் மாறி வருவதாகவும், பெயர் மற்றும் முகவரியில் குளறுபடிகள் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், ஓமலுõர் அருகே ஆர்சி செட்டிப்பட்டியில் கோமாளிவட்டம் என்ற இடத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில், 300க்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 70 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விட்டது. அதேபகுதியைச் சேர்ந்த பெரியசாமி மனைவி சரோஜாவுக்கு கடந்த 11ம் தேதி ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது.

அதில் குடும்பத் தலைவர் விவரம் குறிக்கும் இடத்தில், சரோஜாவின் போட்டோவுக்கு பதிலாக நடிகை காஜல்அகர்வாலின் போட்டோ இடம் பெற்றிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ரேஷன் கடை ஊழியர்களிடம் முறையிட்டபோது, அவர்கள் ஓமலுõர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் போட்டோ கொடுத்து, மாற்றிக்கொள்ளலாம் என்றும், அதுவரை பொருட்கள் தடையில்லாமல் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.