தெலங்கானாவில் 1முதல் 12ம் வகுப்பு வரை தெலுங்கு கல்வி கட்டாயம்: முதல்வர் தகவல்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 03:51

ஹைதராபாத்,

தெலங்கானாவில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று முதலவர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

தெலுங்கு மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் டிசம்பர் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பாக நடைபெற்ற அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் சந்திர சேகர ராவ் கலந்து கொண்டார். மாநாட்டு ஏற்பாடுகளை செய்வதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைகக் கூட்டத்தில முதல்வர் சந்திர சேகரராவ் கூறியது: மாநிலம் முழுவதும் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன பலகைகள் மற்றும் அடையாள அட்டைகள் தெலுங்கு மொழியிலேயே வைக்கப்பட வேண்டும். மக்கள் விரும்பும் பட்சத்தில் தெலுங்குடன் பிற மொழிகளிலும் பலகைகளை வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும். இந்த உத்தரவை அமல் செய்யும் பள்ளிகளுக்கு மட்டுமே  அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்கப்படும். அடுத்த கல்வியாண்டு முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்.

தொடக்க கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அனைத்து பாடங்களையும் தெலுங்கில் தயாரிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார். தெலுங்கை கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் தெலங்கானாவில் இயங்க முடியாது என்று எச்சரித்த சந்திரசேகர ராவ், தெலுங்கு மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என்று சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவுகள் குறித்து மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகாரத் தீர்மானங்களை நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டது. அரசின் தலைமை ஆலோசகர் ராஜீவ் சர்மா, ஆலோசகர் கே.வி. ராமநாசரி, சாகித்திய அகாடெமி தலைவர் நந்தினி சித்தா ரெட்டி, அதிகாரப்பூர்வ மொழி ஆணையத் தலைவர் தேவலபள்ளி பிரபாகர் ராவ், கிரன்தலயா பரிஷத் தலைவர் ஆயச்சிதம் ஸ்ரீதர், கலாசார விவகார இயக்குநர் மமிதி ஹரிகிருஷ்ணா, தெலுங்கு பல்கலைக்கழகம் வி.சி. சத்யநாராயணா, தெலங்கானா மாநில அரசு டில்லி பிரதிநிதி எஸ்.வேணுகோபாலச்சார் ஆகியோர் கூட்டத்தில் பங்கு பெற்றனர்.