எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்த வெனிசுலா அதிபர் சம்மதம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 03:46

கராகஸ்:

வெனிசுலாவில் அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்த வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ சம்மதம் தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உணவு, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் இருந்து பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 125 பேர் உயிர் இழந்து உள்ளனர். வெனிசுலா அதிபர் மதுரோ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

வெனிசுலாவில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அண்டை நாடான டொமினிக் குடியரசு மற்றும் ஸ்பெயின் முன்னாளர் பிரதமர் ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ் ஸபாட்டரோ ஆகியோர் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் வெனிசுலா அதிபர், எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

நிகோலஸ் மதுரோவை எதிர்க்கட்சிகளுடன் நேரடியாக பேச்சு நடத்த வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. அவர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்த இருப்பதாக நிகோலஸ் மதுரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தீர்வுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இன்று டொமினிக் குடியரசு அதிபருடன் பேச்சு நடத்த உள்ளனர்.

கடந்த ஆண்டில் மதுரோவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமாதம் தொடர்ச்சியாக பேச்சு நடந்தது. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.