வெளிநாட்டு பட்டாசுகளின் இறக்குமதிக்கான தடை தொடர்கிறது : மத்திய அரசு அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 03:41

புதுடில்லி,

தீபாவளி பண்டிக்கைக்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பட்டாசுகள் இறக்குமதி செய்ய மத்திய அரசு விதித்த தடை தொடர்கிறது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை இந்தியாவில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் ‘‘வெளிநாட்டில் இருந்து கள்ளத்தனமாக இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகள் குறித்து தொடர்ந்து பல புகார்கள் வருகின்றன. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பொட்டாசியன் கிளோரேட் (Potassium Chlorate) என்ற நச்சு பொருள் வெளிநாட்டு பட்டாசுகளில் கலந்திருப்பதால் அவை சுற்றுசூழலுக்கும் மக்களின் உடல்நலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கிறது.’’

‘‘எனவே வெளிநாட்டு பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி கள்ளத்தனமாக பட்டாசுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.’’ என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

‘‘வெளிநாட்டில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரலிடம் சிறப்பு உரிமம் பெறவேண்டும். ஆனால் இதுவரை அத்தகைய உரிமம் எதுவும் இந்தியாவில் யாருக்கும் வழங்கப்படவில்லை’’ என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பட்டாசு தொழில் சிவகாசி வட்டாரத்தில் குடிசை தொழில் போல் நடந்து வருகிறது. பட்டாசு தயாரிக்கும் சிறிய நிறுவனங்கள் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரும் சீன பட்டாசுகள் மிக குறைந்த விலையில் விற்கப்படுவதால் தங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.