அமெரிக்காவின் ஏற்றுமதி உயர்வதில் இந்திய நடுத்தர வர்க்க மக்களின் பங்கு அதிகம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 03:06

வாஷிங்டன்:

இந்தியாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மற்றும் சேவைகளின் அளவு அதிகரிப்பதில் இந்திய நடுத்தர வர்க்க மக்களின் பங்கு முக்கியமானது என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க வெளியுறவு துணைச் செயலாளர் (பொறுப்பு) அலைஸ் வெல்ஸ் தெரிவித்தார்.

அலைஸ் வெல்ஸ் கூறியதாவது:
பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியச் சந்தையில் நல்ல வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் உள்ள 35 கோடி நடுத்தர வர்க்க நுகர்வோர்கள் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு அதிகம் பங்களிப்பவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் ஏற்றுமதிக்கும் இவர்கள் அதிக வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார்கள்.  
கல்வி, சுகாதாரம், நிதி, தொழில்முறை சேவைகள் போன்ற துறைகளில் இவர்கள் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்.
சமீபத்தில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து ஸ்பைஸ் ஜெட், போயிங் ஜெட் ஏர்வேஸ் போன்ற விமானங்களை வாங்கி இருந்தது. விமானப் போக்குவரத்து துறையில் இருந்து முக்கியமான வர்த்தகம் ஆகும்.

எரிசக்தி அதிகம் தேவைப்படும் நாடுகளில் இந்தியா 3ம் இடத்தில் இருக்கிறது. இந்திய நிறுவனங்கள் சென்ற மாதம் முதல் அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத் துவங்கி உள்ளன. இது முக்கியமான நகர்வாகும்.

மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் அமெரிக்காவின் ஏற்றுமதிக்கு சவால் அளிப்பதாக இருக்கலாம். ஆனால் அது போன்ற திட்டங்கள் தேவையானது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். வர்த்தகப்பற்றாக்குறை ஏறக்குறைய 3,000 கோடி டாலராக உள்ளது.

இவ்வாறு அலைஸ் வெல்ஸ் கூறினார்.