சிங்கப்பூரில் 2 கப்பல்கள் மோதி விபத்து: 5 மாலுமிகள் மாயம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 02:59

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஜலசந்தி அருகில் இன்று 2 கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.  இந்த விபத்தில் 5 மாலுமிகளைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

போதிக்கொண்ட கப்பல்களில் ஒன்று இந்தோனேசியாவை சேர்ந்த கப்பல். மற்றொன்று ஒன்று டாமினிக்கன் நாட்டை சேர்ந்த தூர்வாரி கப்பல்.
இந்த விபத்தில் சிக்கிய இந்தோனேசிய கப்பலின் முன்பகுதி சேதமடைந்தது. எனினும் வேறு பெரிய பாதிப்பின்றி நிலையாக இருந்தது. அதில் பயணித்தவர்களும் எந்தவித பாதிப்புமின்றி மீட்கப்பட்டனர்.
தூர்வாரி கப்பலில் பயணித்த 7 சீன மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 சீன மாலுமிகள் மற்றும் மலேசிய மாலுமி ஒருவர் ஆகியோர் காணவில்லை என சிங்கப்பூர் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்புப் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்றுவருவதாக தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இதே இடத்தில் அமெரிக்க போர்க்கப்பல் யுஎஸ்எஸ் ஜான் எஸ்.மெக்கைன் டாங்கர் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 அமெரிக்க மாலுமிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.