கர்நாடகத்தில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தமிழக போலீஸ் மிரட்டுவதாக கர்நாடக போலீஸில் புகார்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 02:52

குடகு

கர்நாடக மாநிலம் குடகு நகரத்தில் உள்ள பேடிங்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தமிழக போலீஸார் நேரில் சென்று அச்சுறுத்துவதாகவும் முதல்வரின் ஆணையின்பேரில் தமிழக போலீஸார் மிரட்டுவதால் தமிழக போலீஸ்மீதும், தமிழக முதல்வர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சந்திகொப்பா காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர்.

தங்கத்தமிழ்செல்வன் மற்றும் செந்தில் பாலாஜி தலைமையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சந்திகொப்பா காவல் நிலையத்திற்கு சென்று மனு கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இன்று காலை டிடிவி தினகரன் சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசும்போது:
30 கோவை போலீஸார் 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் குடகுக்கு சென்று கர்நாடக மாநிலத்தில் தங்கியுள்ள எங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை அச்சுறுத்தியிருக்கிறார்கள்.
முன்னாள் உயர்க் கல்வி அமைச்சர் பழனியப்பன் கைது செய்யப்படவில்லை. அவர் நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையில், தமிழக முதல்வரிடம் பேசும்படி போலீஸார் தன்னை வற்புறுத்தியதாக, செந்தில்பாலாஜி குடகு நகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமியிடம் பேசாவிட்டால், உங்கள் மீது வழக்கு பதிவுசெய்து, கைது செய்வோம் என்றும் கோவை போலீஸார் கூறியுள்ளனர்.
முதல்வர் பழனிசாமி அணிக்கு மாறுவதற்கு ரூ. 20 கோடி வரை பணம் தருவதற்கு தயாராக இருப்பதாக போலீஸார் கூறினார்கள் என்று செந்தில்பாலாஜி கூறினார்.
மாலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சந்திகொப்பா காவல்நிலையத்தில் புகார் தந்ததாக கூறப்படுகிறது.