மீத்தேன் எரிவாயு உற்பத்திக்கான ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்கா மானியம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 02:30

வாஷிங்டன்,

நிலத்துக்கடியில் உள்ள நிலக்கரிப் படுகைகளில் இருந்து மீதேன் எரிவாயுவை  (coalbed methane) உற்பத்தி செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய தனியார் நிறுவனமான பிரபா எனர்ஜி (Prabha Energy Private Limited) க்கு அமெரிக்காவின் வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் மானியம் வழங்கியுள்ளது.

நிலத்தடியில் காணப்படும் நிலக்கரி படுகையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயு கோல்பெட் மீத்தேன் (சிபிஎம்) என்று அழைக்கப்படுகிறது. தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் மீத்தேன் எரிவாயு முக்கிய எரிபொருளாக மாறி வருகிறது.

எனவே மேலும் மீத்தேன் வளங்களை கண்டறிந்து அதன் உற்பத்தியை அதிகரிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இந்தியாவிலும் கோல்பெட் மீத்தேன் உற்பத்தியை அதிகரிக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அகமதாபாத் நகரைச் சேரந்த மீத்தேன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பிரபா எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு அமெரிக்காவின் வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் மானியம் வழங்கியுள்ளது. மானிய தொகை எவ்வளவு என இதுவரை தகவல் வெளியாகவில்லை.

‘‘இயற்கை எரிவாயுவான மீத்தேன் உற்பத்தியில் இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பல அமெரிக்க நிறுவனங்கள் அதற்கான நவீன கருவிகளை வழங்கி வருகின்றன’’ என அமெரிக்க வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.