ஐ.நா. பொதுப்பேரவைக் கூட்டத்தில் ஆங் சான் சூகி பங்கேற்கமாட்டார்: மியான்மர் அரசு அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 02:16

யான்கூன்,

மியான்மரின் வெளியுறவு அமைச்சரான ஆங் சான் சூகி இந்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா பொதுப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று மியான்மர் அரசு அறிவித்துள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறை குறித்து ஆங் சான் சூகி மவுனமாக இருப்பதால் எழுந்துள்ள சர்ச்சையே இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தொடர் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அதனால் லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரை விட்டு வெளியேறி பங்களாதேஷில் தஞ்சமடைந்து வருகிறார்கள்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மியான்மர் தலைவரும் வெளியுறவு துறை அமைச்சருமான ஆங் சான் சூகி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது அனைவருக்கும் அதிர்ச்சி தந்தது.  அதனால் உலகளவில் ஆங் சான் சூகிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில் இந்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா பொதுப்பேரவைக் கூட்டத்தில் ஆங் சான் சூகி பங்கேற்கமாட்டார் என்று அரசு செய்தி தொடர்பாளர் ஜா டே தெரிவித்தார். ஆங் சான் சூகி பங்கேற்காதது ஏன் என்று அவர் எந்தக் காரணத்தையும் கூறவில்லை. சூகிக்கு பதிலாக மியான்மரின் துணை அதிபர் ஹென்ரி வான் தியோ ஐ.நா கூட்டத்தில் பங்கேற்பார் என ஜா டே தெரிவித்தார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மார் இனப்படுகொலை செய்து வருவதாக ஐ.நா மனித உரிமை ஆணைய தலைவர் ஜேய்த் ராட் அல் ஹூசைன் குற்றம்சாட்டிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஐ.நா பொதுப்பேரவைக் கூட்டத்தில் ஆங் சான் சூகி கலந்து கொண்டு பேசினார். அப்போது மியான்மர் ராக்கைன் நகரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடைபெறும் தாக்குதலுக்கு உரிய தீர்வை கண்டறிவேன் என்று ஆங் சான் சூகி உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.