ஆப்கன் எல்லையில் கூட்டு ரோந்து பணிக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 02:13

இஸ்லாமாபாத்,

ஆப்கன் எல்லையில் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள ஆப்கன் ராணுவத்துடன் இணைந்து எல்லையில் கூட்டு ரோந்து பணிகளில் ஈடுபட பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் கான் அப்பாஸி தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக குற்றசாட்டுகள் கூறப்படுகின்றன. ஆப்கானிஸ்தானுக்கான புதிய ராணுவ கொள்கையை அறிவிக்கும் போது அதிபர் டிரம்ப்பும் இதை குறிப்பிட்டு பாகிஸ்தானை எச்சரித்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் ஆப்கன் ராணுவத்துடன் இணைந்து ரோந்து பணிகளில் ஈடுபட பாகிஸ்தான் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் கான் அப்பாஸி அறிவித்துள்ளார்.

ஆப்கன் எல்லையை கடக்கும் இரு நாடுகளின் மக்களை கண்காணிக்கவும், பயங்கரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளவும் இந்த கூட்டு ரோந்து பணி உதவும் என அப்பாஸி தெரிவித்தார்.

ஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் 2,600 கிலோ மீட்டர் தொலைவு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியை பாகிஸ்தான் துவங்கியுள்ளது. இது குறித்து பேசிய அப்பாஸி, ஆப்கன் அரசும் எல்லையில் வேலி அமைத்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

ஆப்கனில் நிலவும் பிரச்சனையால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆப்கன் பிரச்சனைக்கான தீர்வை ஆப்கன் அரசு தான் எடுக்க முடியும் என்று அப்பாஸி தெரிவித்தார்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான்  அடைக்கலம் கொடுப்பதாக எழுந்துள்ள குற்றசாட்டை மறுத்த பிரதமர் அப்பாஸி, பாகிஸ்தான் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட தீவிரமாக போராடி வருவதாக கூறினார்.

‘‘இந்த விஷயத்தில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது. இது தொடர்பாக எழும் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். நாங்கள் மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிப்பது போல் அவர்களும் எங்களின் இறையாண்மையை மதிக்க வேண்டும்’’ என பிரதமர் அப்பாஸி தெரிவித்தார்.