ரூ. 78 கோடி மோசடி: சிறையில் உள்ள கோ.சி. மணி மகன் அன்பழகன் மீண்டும் கைது

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 01:34

சென்னை,

போலி ஆவணங்களை வங்கியில் தாக்கல் செய்து ரூ.78 கோடி பண மோசடி செய்ததாக முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணியின் மகன் அன்பழகனை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அன்பழகனை, இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மணலியில் ‘கேலக்ஸி இம்பேக்ஸ்’ என்ற பெயரில் இறக்குமதி நிறுவனத்தை போலியாக உருவாக்கி, அதன் மூலம் வெளிநாடுகளுக்கு பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார் வந்தது.
இது தொடர்பாக இந் நிறுவனத்தை உருவாக்கிய லியாகத் அலிகான் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 20 கோடியை முடக்கி வைத்தனர்.

சென்னையில் போலியான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களை நடத்தி வந்த லியாகத் அலிகான் வெளிநாடுகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள மின்னணு சாதனங்களை சரக்கு விமானங்களிலும், கப்பல்கள் மூலமாகவும் இறக்குமதி செய்ததாக போலியான ஆவணங்கள் தயாரித்துள்ளார்.

அந்த ஆவணத்தை வைத்து இவர் நடத்தி வந்த போலி நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலமாக பெரும் அளவு கணக்கில் வராத ஹவாலா பணத்தை அனுப்பியதும் தெரிய வந்தது. இவர் மூலமாக வெளிநாட்டுக்கு பண பரிமாற்றம் செய்ததாக முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணியின் மகன் அன்பழகனை அமலாக்கத் துறை அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அன்பழகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ. 78 கோடி அளவுக்கு வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாக அன்பழகன் மீது சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள இந்தியன் வங்கி கிளை துணை மேலாளர் மனோகரன் சென்னை காவல் ஆணையார் ஏ.கே. விஸ்வநாதனிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து அன்பழகன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. புழல் சிறையில் உள்ள அன்பழகனை, வங்கி மோசடி வழக்கில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. நீதிமன்றம் 2 நாட்கள் போலீஸ் காவல் அனுமதியை இன்று வழங்கியது. போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட அன்பழகனிடம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.