புதுச்சேரியில் 2016ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். படிக்க தேர்வு செய்யப்பட்ட 778 மாணவர்கள் தேர்வு ரத்து: மருத்துவ கவுன்சில் அதிரடி

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 01:15

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள நிகர் நிலைப்பல்கலைக்கழகம் 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2016ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ் படிக்க தேர்வு செய்யப்பட்ட 778 மாணவ–மாணவியரை கல்லூரியிலிருந்து விலக்குவதற்கான  உத்தரவை இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி 778 மாணவர்களின் தேர்வை ரத்துச் செய்யும் ஆணையை இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநரான கிரண் பேடி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவை எம்.சி.ஐ. வெளியிட்டுள்ளது.

2016ம் ஆண்டு  எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையின்போது தகுதி அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக பணத்தின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர் என கிரண் பேடி தனது புகாரில் தெரிவித்து இருந்தார்.

பல பெற்றோர்கள் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் கிரண்பேடி விசாரணை நடத்தியதாகவும் அந்த விசாரணையில் தேர்ந்து எடுக்கப்பட்ட 1200 மாணவர்களில் 778 பேர் நீட் தேர்வு முறைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாகவும் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது என கிரண்பேடி கூறி உள்ளார்.

அரசாங்கத்தால் நடத்தப்படும் .இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மட்டுமே 150 இடங்களுக்கு விதிமுறைகளின்படி  மாணவர்களை தேர்வு செய்ததாக கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ் மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் ஊழலை ஒழிக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காகவே நீட்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பல மருத்துவ கல்லூரிகள் நீட் தேர்வு விதிமுறைகளை பின்பற்றவில்லை என இந்திய மருத்துவ கவுன்சில்  தனது உத்தரவில் கூறியுள்ளது.

அரசுக்கு தொடர்பில்லை

2016ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மாணவர்களைத் தேர்வு செய்ததில் அரசுக்கு எந்தப் பங்கும் கிடையாது என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

எனவே, இந்த விசயத்தில் யூனியன் பிரதேச அரசை குறைகூறுவதில் வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.