வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பில் அமெரிக்க வாழ் இந்தியரை டிரம்ப் நியமனம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 01:09

வாஷிங்டன்

வெள்ளை மாளிகையின் முக்கிய பொறுப்பில் அமெரிக்கவாழ் இந்தியர் ராஜ் ஷா, இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் நியமிக்கப்பட்டார்.


”அமெரிக்க அதிபரின் துணை உதவியாளராகவும், முதன்மை துணை செய்தி தொடர்பாளராகவும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜ் ஷா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்” வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ராஜ் ஷா முன்னதாக அதிபரின் துணை உதவியாளராகவும், துணை தொலைத்தொடர்பு இயக்குநராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அதிபர் டிரம்பின் நம்பிக்கைக்குரியவரான ஹோப் ஹிக்ஸ், தொலைத்தொடர்பு இயக்குநராக நியமிக்கப்பட்டதாக அறிக்கைமூலம் தெரியவந்துள்ளது. ஹிக்ஸ் முன்னர் அதிபரின் துணை உதவியாளர் மற்றும் இடைக்கால தொலைத்தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

ஃபாக்ஸ் செய்தி நிறுவன பங்களிப்பாளரும், வாஷிங்டன் டைம்ஸ் கடுரையாளருமான மெர்சிடீஸ் ஷ்லாப் அதிபரின் உதவியாளராகவும், தகவல் தொலைத்தொடர்புக்கான மூத்த ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்கும்போது, வெள்ளை மாளிகைக்கு வருகைத்தந்த டிரம்ப் உதவியாளர்களுள் ராஜ் ஷாவும் ஒருவர். வெள்ளை மாளிகைக்கு வரும் முன்னர் ரிபப்லிகன் நேஷ்னல் கம்மிட்டியில் எதிர்ப்பு ஆராய்ச்சி இயக்குநராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.