ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ உலக நாடுகளுக்கு ஐ.நா. அழைப்பு

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 01:02

ஐ.நா.சபை

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ உலக நாடுகளுக்கு ஐ.நா சபை அழைப்பு விடுத்துள்ளது.

மியன்மரில் சிறுபான்மையினரான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மர் ராணுவம் பல அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.. அதனால் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் தங்கள் வாழ்ந்த சொந்த இடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள் தங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து மனிதாபிமான அடிப்படையில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும் என்று ஐ.நா.சபை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா பொது செயலாளருக்கான செய்தித் தொடர்பாளர் ஸ்டிபன் டூஜாரிக் செய்தியாளர்களிடம் கூறும்போது ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்படுவது குறித்து எங்களது நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். மக்கள் வலுகட்டாயமாக அவர்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப் படுகிறார்கள். ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பான படங்கள் எல்லாம் இதயத்தை பிளக்கும் நிலையில் உள்ளது.

சர்வதேச நாடுகள் அனைத்தும் தங்களிடையே நிலவும் வேறுபாடுகளை ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும். அந்த மக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி தேவை. ஐ.நா சபை அவசர கால அடிப்படையில் சுமார் 3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளது.

வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியாக்களுக்கு உதமாறு ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திடம் அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஐ.நா மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உதவி செய்வதை மியான்மர் அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. அப்பகுதியில் மியன்மர் அரசு மற்றும் செஞ்சிலுவை சங்கங்கள் உதவி செய்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி செய்வதற்கு ஐ.நா மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஐ.நா பொது செயலாளருக்கான செய்தித் தொடர்பாளர் ஸ்டிபன் டூஜாரிக் கூறினார்.