டில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தல்: தலா 2 பதவிகளை காங், பாஜக வென்றது

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 00:03

புதுடில்லி,

டில்லி பல்கலைக்கழகத் தேர்தலில் பாஜக மாணவர் அமைப்பு பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் மாணவர் அமைப்பு, தலைவர் துணைத் தலைவர் பதவிகளை தட்டிச் சென்றுள்ளது.

பாஜகவின் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் செயலர், இணைச் செயலர் பதவிகளை வென்றுள்ளது.
டில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் அமைப்புகளின் தேர்தல்கள் எப்போதுமே தேசிய அளவில் கவனம் ஈர்ப்பவையாகும்.
தங்கள் செல்வாக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அரசியல் கட்சிகள் சுய பரிசோதனை செய்ய இவ்வகை தேர்தல்கள் உதவும். அதிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சி பின்புலம் கொண்ட மாணவர் அமைப்புகள் நடுவேதான் நேரடி மோதல் இருக்கும்.

இந்த நிலையில், டில்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் முடிந்து, அதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி முன்னணியில் இருந்தது. ஆனால் மதியத்திற்கு பிறகு அந்த அமைப்பு பின்னடைவை சந்தித்தது.

காங்கிரஸ் மாணவர் பிரிவைச் சேர்ந்த ராக்கி துஷித் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். தலைவராக பாஜக மாணவர் அணியைச் சேர்ந்தவர் தான் வெற்றி பெறுவார் என கருத்து நிலவியது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றியது.

பாஜகவைச் சேர்ந்த மஹா மேதா நாகர் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இணைச் செயலாளராக பாஜக மாணவர் அணியைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்குகள் மறுபடியும் எண்ணப்படுகிறது.

அடுத்தடுத்து மாணவர்கள் மத்தியில் பாஜக ஆதரவு அமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவது அக்கட்சி தலைமையை கவலையடையச் செய்துள்ளது.