மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய போர்: தமிழக மக்கள் ஒன்று திரள ஸ்டாலின் அழைப்பு

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017 22:57

சென்னை,
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய போர் விரைவில் தொடங்க உள்ளது. இதில் தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர  வேண்டும் என்று தாம்பரத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


இந்திய முழுமைக்கும் மருத்துவப் படிப்புக்கு மாணவ, மாணவிகளை தேர்வு செய்ய  நீட் எனும் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க. தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராகதமிழகம் முழுவது மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தா. மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.  அவர் பேசியதாவது:

எதிர்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாவை கிடப்பில் போட்டு விட்டனர். வாக்குறுதி கொடுத்த நிர்மலா சீதாராமன் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை. நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு தருவோம் என்கிற உறுதிமொழி என்னானது?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள இந்திய கறுப்பு பணத்தைக் கொண்டு வந்து மக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போடுவோம்  என்று பிரசாரத்தின் போது  மோடி கூறினார்.

ஆனால் 15,000 அல்ல, 15 ரூபாய்கூட போடவில்லையே. அதற்கு எந்த பதிலும் இல்லை.

தமிழகத்தில் நடைபெறுவது அதிமுக ஆட்சி அல்ல, பாஜக ஆட்சி தான் நடைபெறுகிறது. செயல்பட முடியாத நிலையில், மெஜாரிட்டி இல்லாத எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடக்கிறது.

அனிதா மரணத்துக்கு நீதி வேண்டும். நீட் தேர்வால்தான் அனிதா தற்கொலை செய்து கொண்டார். இது கொலை. இது நீட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல மக்கள் பிரச்னைகளுக்கான தீர்வு கோரும் போராட்டம்.

ரூ. 3 லட்சம் செலவு செய்து, நீட் பயிற்சி வகுப்புக்கு ஏழை மாணவர்கள் எப்படி செல்ல முடியும்?. காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு வந்தபோது எதிர்த்தவர் கருணாநிதி. கருணாநிதி தொடர்ந்த வழக்கில் நீட் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

சட்டசபையைக் கூட்டும் போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம்.

அடுத்த போராட்டம் அதிமுக அரசுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும். தமிழக மக்கள் ஒன்று திரள வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய போர் தொடங்க உள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என்றும் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

கூட்டணி கட்சிகளான  காங்கிரஸ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூ னிஸ்டு,விடுதலை சிறுத்தை, முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி , திராவிடர் கழகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை விவசாயிகள் தொழிலாளர் கட்சி, த.மு.மு.க. ஆகியவை சார்பில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டது பற்றி மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.