ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 30 கோடி குடும்பங்கள் வங்கி கணக்குகளை துவங்கியுள்ளனர் : அருண் ஜெட்லி அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017 20:26

புதுடில்லி,

மத்திய அரசின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 30 கோடி குடும்பங்கள் வங்கி கணக்குகளை துவங்கியுள்ளனர் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ‘‘ மத்திய அரசின் ஜன் தன் யோஜனா திட்டம் அமலாக்கப்படுவதற்கு முன் இந்தியாவில் 42 சதவீத குடும்பங்கள் வங்கி கணக்கு இல்லாமல் இருந்தன. இந்த திட்டத்தின் மூலம் பல குடும்பங்களுக்கு அடிப்படை தொகை இல்லாமல் வங்கி கணக்கு துவங்க அரசு உதவியது. அதன் காரணமாக தற்போது 99.9 சதவீத குடும்பங்களில் ஒரு வங்கி கணக்காவது துவங்கப்பட்டுள்ளது’’

‘‘கடந்த செப்டம்பர் 2014ம் ஆண்டு ஜன் தன் யோஜனா திட்டம் துவங்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில் நாடு முழுவதும் 76.81 சதவீத வங்கி கணக்குகளின் இருப்பு பூஜ்யமாக இருந்தது. ஆனால் அது தற்போது 20 சதவீதமாக குறைந்துள்ளது’’ என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதார் திட்டத்தை குறித்து பேசிய அருண் ஜெட்லி ‘‘காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் திட்டம் துவங்கப்பட்டாலும் பாஜக ஆட்சியில் தான் அவை முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.  அதன் மூலம் அரசு உதவிதொகைகள் மக்களை சரியாக சென்றடைகிறது என அருண் ஜெட்லி கூறினார்.