சிறு வணிக பண வீக்கம் 3.36 சதவீதமாக உயர்வு

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017 03:05

புதுடில்லி:

சில்லரை வணிக பண வீக்கம் 3.36 சதவீதமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் சில்லரை வணிக பண வீக்கம் 2.36 சதவீதமாக இருந்தது.

இந்த பண வீக்க உயர்வுக்கு காய்கறிகள், பழங்கள் விலை உயர்ந்ததுதான் காரணம் என்று மத்திய புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 1.52 சதவீதம் உயர்ந்துள்ளது என புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் தினசரி பொதுமக்கள் பயன்படுத்தும் பழங்கள் விலை அடிப்படையில் பண வீக்கம் 5.29 சதவீதம் உயர்ந்தது.
காய்கறிகளுக்கான பண வீக்கம் 6.16 சதவீதம் உயர்ந்தது. ஆனால், ஜூலை மாதத்தில் பழ வகைகளுக்கான  பண வீக்கம் 2.83 சதவீதமாக இருந்தது.
காய்கறி வகைகளுக்கான  பண வீக்கம் ஜூலையில் எதிர்மறையாக (-)3.57 சதவீதமாக இருந்தது.
இந்த பண வீக்கம் உயர்வு சில்லரை வணிக பண வீக்கத்தை உயர்த்தியுள்ளது.
ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருள்கள் விலையும் உயர்ந்துள்ளது.
ஜூலை மாதத்தில் டப்பா வகை உணவுகள், நொறுக்கு தீனி வகைகள், இனிப்பு வகைகள் விலை உயர்வு 0.43 சதவீதமாக அமைந்தது.
ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் இந்த விலை உயர்வு 1.96 சதவீதமாக குதித்து உயர்ந்துவிட்டது.
ஆகஸ்ட் மாதத்தில், ஜூலை மாதத்தில் போக்குவரத்து செலவு, தகவல் தொடர்புக்கான பண வீக்கம் 3.71 சதவீதம் உயர்ந்தது.
ஜூலை மாதத்தில் இந்த பண வீக்கம், 1.76 சதவீதமாக இருந்தது.
ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் தானிய வகைகள், மாமிசம், மீன், எண்ணெய் வகைகள், கொழுப்பு பொருள்கள் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளதாக மத்திய புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது.