மக்களிடம் இருந்து விலகியதாலேயே காங்கிரஸ் ஆட்சியை இழந்தது: ராகுல் காந்தி

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 23:01

கலிபோர்னியா,

இந்திய மக்களிடம் இருந்து விலகியதாலேயே காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது என அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதாவது:
இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன. உலகில் உள்ள அத்தனை மதங்களும் இந்தியாவில் இருக்கின்றன. இந்தியாவில் 17 ஆட்சி மொழிகள் இருக்கின்றன. இந்தியா மிக வலிமையாக உருவெடுத்துள்ளதை அரசியல் வல்லுநர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இந்தியா சிதறிப் போகும் என்பதுதான் அவர்களின் கணிப்பாக இருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரையில் சீனாவைப் போல உள்நாட்டு சூழலுக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை.
இந்தியாவில் அரசியல் ஒருமுகப்படுத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் தனிமைப்படுத்தப்படும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தன்னிச்சையாக மட்டும் முடிவெடுக்கப்பட்டது.

 நாட்டின் நாடாளுமன்றத்துக்கும் தலைமை பொருளாதார ஆலோசகருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

இதன்விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீத சரிவை சந்தித்துள்ளோம். பணமதிப்பிழப்பால் பல லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிட்டது. மக்களிடம் இருந்து விலகிய காங்கிரஸ் மக்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

2012-ல் மக்களிடம் இருந்து விலகிச் சென்றது காங்கிரஸ் கட்சி. இதற்கு காரணமே பிடிவாதம்தான். மக்களுடனான உரையாடலை காங்கிரஸ் கைவிட்டிருந்தது.

காங்கிரஸ் கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை பாஜக இப்போது செய்துகொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் போன்றவை காங்கிரஸின் திட்டங்கள்தான்.

இந்தியாவில் 'அகிம்சை' என்கிற தத்துவம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. பசுபாதுகாப்பு என்ற பெயரில் படுகொலைகள் நடைபெறுவது புதிதாக நிகழ்கின்றன. மாட்டிறைச்சி வைத்திருக்கிறார், மாட்டிறைச்சி சாப்பிடுகிறார் என சந்தேகித்து படுகொலைகள் நடைபெறுகின்றன. வெறுப்பு அரசியலால் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இவையெல்லாம் இந்தியாவுக்கு புதியவையாகும்.

இவ்வாறு, ராகுல் காந்தி கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக் கழக கருத்தரங்கில் கூறினார்.