மாயூரநாதர் மண்ணில் மகாபுஷ்கர திருவிழா!

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017காவிரியில் நீராடினால் மோட்சம் கிடைக்கும்: ஆயிரம் வருடங்களாக கங்கையில் தினம் தினம் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் துலா மாதத்தில், மயிலாடுதுறை நகரம் துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினால் கிடைக்கும். கங்கை போன்ற எல்லா புண்ணிய நதிகளும் துலா மாதத்தில்  இந்த துலாக்கட்ட காவிரியில் கலந்து தங்களுடைய பாவங்களை போக்கிக் கொள்கின்றன   என்கிறது துலாக் காவிரி மஹாத்மியம்.

தல வரலாறு: கர்நாடக மாநிலம்  பிரம்மகிரி குன்றில் இருந்து உருவாகிற காவிரி, மைசூரு வழியாக தமிழக எல்லைக்குள் புகுந்து சேலம்,  கோவை, கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டம் வழியாக கும்பகோணத்தை தாண்டி மயிலாடுதுறையை வந்தடைகிறாள். அங்கு துலாக்காவிரி என்ற பெயர் பெற்று காவிரிப்பூம்பட்டி னத்தில் வங்கக்கடலோடு சங்கமிக்கிறாள். இந்தக் காவிரி உற்பத்தியாகும் இடத்திலும், கடலோடு சேரும் இடத்திலும் காவிரி அம்மன், காவேரித்தாயார் என்ற பெயர்களில் ஆலயங்கள் உள்ளன.

தமிழகத்தில் காவிரிக்கரையில் உள்ள ஆறு சிவத் தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று,  மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.  இத்தலம் மிகவும் தொன்மையான சிவத்தலம் ஆகும். 'ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது' என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது. ஒன்பது நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி 156 அடி  உயரத்தில் விண்ணை  முட்டும் வகையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

பிரம்மதேவனால் உருவாக்கப்பட்டது மாயவரம் என்றும் அழைக்கப்படுகிற மயிலாடுதுறை. இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு கூறுகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்த தலம் இது. இங்கு அம்பிகை மயில் வடிவிலும், இறைவன் சுயம்புமூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார்கள்.  சிவாலயங்களில் கந்த சஷ்டியின் போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவது வழக்கம்.  ஆனால், இத்தலத்தில்  சிவனிடம் வேல் வாங்குவது விசேஷமாக கருதப்படுகிறது.

இங்குள்ள சிவனுக்கு புடவை சாத்தப்படுகிறது!  லிங்கத்தில் ஐக்கியமான பெண் அடியாரான அனவித்யாம்பிகையை கவுரவிக்கும்  விதத்தில் லிங்கத்தின் மீது புடவை சாத்தப்படுகிறது. நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன் முக்தி கொடுத்ததன் காரணமாக அவர்களுக்கு அம்பாள் சன்னிதியின்  தெற்கே தனி சன்னிதி உள்ளது. கோயிலில் உள்ள அனைத்து சன்னிதிகளை தரிசித்தபிறகு, அனவித்யாம்பிகை சன்னிதியையும்  வணங்கினால்தான் தன்னை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று சிவபெருமானே வரம் வழங்கிய பெருமைக்குரிய தலம்.

ரிஷப தீர்த்த சிறப்பு: உலகநலனுக்காக பார்வதிதேவி மயிலாக மாறி மாயவரத்தில் தவம் இருந்தாள். இதைக் காண  மகாவிஷ்ணு, பிரம்மா, தேவர்கள் ஆகியோர் அவரவர் வாகனங்களில் வந்த போது ரிஷபம் மட்டும் வேகமாகச் சென்று மாயூரத்தை அடைந்தது. தன்னால்தான் பரமன் விரும்பிய இடங்களுக்கு எல்லாம் செல்கிறார், நான் இல்லை என்றால் அவர் இல்லை என்று ஆணவம் அடைந்தது. இதை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த ஈசன், தன் தலைமுடி ஒன்றை எடுத்து அதன் முதுகின்மேல் வைத்திட, அந்த பாரம் தாங்க முடியாமல் மயங்கிச் சாய்ந்தது. பின் எழுந்து ஆணவம் கொண்ட பாவம் தொலைய வழி கேட்டது. மயிலாடுதுறை துலாக்காவிரி கட்டத்தில் நீராடி, சிவலிங்கம் செய்து  வில்வத்தால் அர்ச்சனை செய்தால்,  தட்சிணாமூர்த்தி குருவடிவாய் வந்து ஏற்போம் என்றார். ரிஷபம் பூஜித்ததால் துலாக்கட்டத்துக்கு ரிஷப தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.

ரிஷபம் வழிபட்ட சிவன், வதான்யேஸ்வரர் என்ற பெயருடன் வள்ளல் சிவனாக (வள்ளலார் கோயில்) அருள் தருகிறார். காவிரி நதி வடகரையில் புஷ்கர தீர்த்த நீராடல் செய்து, பித்ரு பூஜை, கன்யா பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் செய்து மாயூரநாதர் கோயில், வள்ளலார் கோயிலை தரிசிக்கவேண்டும். அதன் பிறகு மூன்று  கி.மீ., தொலைவில் உள்ள 108 திருப்பதிகளில் ஒன்றான பரிமளரங்கநாதரையும் திருஇந்தளூர் சென்று தரிசிக்க வேண்டும்.  இதுவே புஷ்கர நீராடல் விதியாகும்.

காவிரி புஷ்கர திருவிழா: காவிரி புஷ்கரத் திருவிழா, ஒவ்வொரு வருடமும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம்பெயரும் பொழுது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழா.

மூன்றரைக்கோடி தீர்த்தத்துக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் பன்னிரண்டு நாட்கள் பிரவேசம் செய்வதாக வரலாறு.

குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம்பெயரும் பொழுது துலாம் ராசிக்கு உரியவரான காவிரி நதியில் புஷ்கரமானவர், இந்த ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 27ம் தேதி (இன்று) செவ்வாய்க்கிழமை முதல் புரட்டாசி மாதம் 8ம் தேதி (24.9.2017) ஞாயிறு வரை வாசம் செய்வதாக ஐதீகம். இந்த புஷ்கரம், மகாபுஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.

காவிரி நதியின் ராசி, துலாம். 144 வருடங்களுக்கு ஒரு முறை இந்த மகா புஷ்கரம் வரும். இப்போது இந்த மகாபுஷ்கரத் திருவிழா காவிரி பாயும் எல்லா இடங்களிலும் அரசு உதவியுடன் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் துலாக்கட்டக்காவிரியில் மகாபுஷ்கர விழா வெகு சிறப்பாக கொண்டாடப்ப டுகிறது.

இந்த புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால், இந்தப் புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், அன்னதானம், ஆடைதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனைத் தந்து நம்மை மோட்சத்துக்கு போக வழிவகுக்கும் என்பதும் ஐதீகம். மேலும் இங்கு நீராடி, பிதுர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்வதால் பிதுர் சாபம் நீங்கி நல்வாழ்க்கை  வாழவும் வழிவகுக்கும். இத்தலத்தின் தனி சிறப்பு ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா நீராடல் மற்றும் கார்த்திகை முதல் நாளின் முடவன்  முழுக்கு ஆகும்.  இந்த நாட்களில் காவிரியில் மூழ்கி எழுந்தால், பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.

இருப்பிடம்: மயிலாடுதுறை நகரின் மையப்பகுதி. நாகப்பட்டினம் மாவட்டம்.

நேரம்: காலை 6 –- 12.30 மணி, மாலை 4 – -இரவு 9 மணி.

தொடர்புக்கு – 94439 21034