உலகின் பெரிய கடனாளி!

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017

தன் கல்யாணத்திற்காக குபேரனிடம் 14 லட்சம் தங்க நாணயங்களைக் கடனாக வாங்கியதால், ஏழுமலையானை 'பெரிய கடனாளி' என்று சொல்வர். இதற்கான கடன் பத்திரத்தையும் குபேரனுக்கு எழுதிக் கொடுத்தார். இந்த பத்திரத்தில் பிரம்மா, சிவன், அரச மரத்தின் அபிமான தேவதை ஆகிய மூவரும் சாட்சி கையெழுத்திட்டனர். இந்த கடன் மட்டுமில்லாமல் இன்னொரு கடனும் ஏழுமலையானுக்கு தினமும் ஏறிக் கொண்டேயிருக்கிறது. 'கோவிந்தா' என்ற திருநாமத்தை ஒரு முறை சொன்னால் கூட போதும். உடனே அந்த பக்தருக்கு ஏழுமலையான் கடன்பட்டவராகி விடுகிறார். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் திருமலை எங்கும் கோவிந்த நாமம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஏழுமலையான், உலகிலேயே மிகப் பெரிய கடனாளியாக ஆகி கொண்டிருக்கிறார் என்பதை உணரலாம்.

 திருப்பதியில் கல்விக்கடவுள்!

புராணங்களில் திருப்பதிமலை ‘வராக க்ஷேத்திரம்’ எனப்படுகிறது. சுவாமி புஷ்கரணி தீர்த்தக்கரையில் வராகர் கோயில் உள்ளது. கருவறையில் பூமிதேவியை மடியில் ஏந்திய நிலையில் இவர் காட்சியளிக்கிறார். இவரே திருப்பதி வெங்கடாஜலபதிக்கு திருமலையில் இடம் கொடுத்தவர் என்று தலபுராணம் சொல்கிறது. இதனால் இவ்வூரை வராக க்ஷேத்திரம் என்பர். வராகருக்கு நைவேத்யம் படைத்து அறிவிப்பு மணி ஒலித்த பிறகே, வெங்கடாஜலபதிக்கு நைவேத்யம் படைக்கப்படும். ஆதிவராகர் கோயிலுக்குச் சென்ற பிறகே, ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது மரபு. ‘ஞானப்பிரான்’ என்னும் சிறப்பு பெயர் கொண்ட இவரை தரிசித்தால், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்.