வாதவூர் வண்டு – கிருபானந்த வாரியார்

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017

தேன் மிகவும் இனிமையானது; உலகில் உணவுப் பொருட்கள் பல உள்ளன. பால், தயிர், நெய், பழம், கிழங்கு உட்பட பல்வேறு உணவுப் பண்டங்கள்  யாவும் நாள் சென்றால் கெட்டுவிடும். எத்துணை உயர்ந்த பால் ஆயினும் மூன்று நாட்கள் வைத்திருந்து அதனை பருக முடியாது. நல்ல பழத்தை ஒரு மாதம் வைத்து உண்ண முடியாது. உணவுப் பொருட்கள் யாவுமே நாள் சென்றால் சுவை குன்றும்; நாறும்; உடம்புக்கு ஊறு செய்யும்.

கெடாதது!

ஆனால், உணவுப் பொருட்களில் ஒன்று மட்டும் எத்துணை ஆண்டுகள் கழிந்தாலும் கெட்டுப் போகாது. தன்னிலை மாறாது நின்று சுவை பயக்கும். அத்தகைய உணவுப் பொருள் எது? தேன் ஒன்றுதான்! தேன் நாள் செல்லச் செல்லப் புளிக்காது. புளிக்குமாயின், வெல்லப்பாகு கலந்த தேன். நெல்லை மாவட்டத்தில், திருச்செந்தூருக்கு போகும் வழியில் பூமியை அகழ்ந்தார்கள். அங்கே ஒரு தேன் ஜாடி கிடைத்தது. அது பல நூறு ஆண்டுகட்கு முன் புதைக்கப்பட்டது; அதிலிருந்த தேன் சிறிதும் கெடாதிருந்தது.

எனவே, தேன் என்றும் கெடாது ஒரே தன்மையாக இருப்பது. இது போல ‘திருவாசக’மும் ஒரு போதும் சிதையாத சிறப்புடையது.

அழியாத் தன்மையுடையது!

தேன் தான் கெடாததோடன்றி, தன்னில் ஊறவைத்த பேரீச்சம்பழம், திராட்சை, இஞ்சி முதலிய பொருட்களையும் கெடவிடாது. லேகியங்களில் தேன் கலப்பதன் காரணம், அதனை கெடவிடாமல் காப்பதற்காகவே!  அது போல் திருவாசகம் தான் அழியாதது மட்டுமின்றி தன்னை ஓதுவாரையும் அழியாமல் காக்கும் திறனுடையது.

‘‘மருவா நெறியளிக்கும் வாதவூர் எம்கோன்

திருவாசக மென்னுந் தேன்.’’

(எல்லை – முடிவு, மருவா நெறி – முடிவு இல்லாத தன்மை.)

தேன் பித்தத்தை போக்கும். மந்தத்தை தவிர்க்கும்; நல்ல ரத்தத்தை நல்கும். நெடுங்காலமாக நமக்கு தொல்லை தரும் பிறவிப்பிணியை மாற்றும் திருவாசகத்தேன்.

நோய் தீர்க்கும்!

உடம்புக்கு பல பிணிகள் உண்டு. அப்பிணிகளை எளிதில் போக்கவல்ல மருந்து, தேன். உயிருக்கு என்றும் தொடர்ந்துவரும் நோய், பிறவி. எண்ணில் காலமாக எண்ணில்லாத இடங்களில் எண்ணற்ற பிறவிகளில் மாறி மாறி பிறந்தும் இறந்தும் வருகின்ற உயிர்களாகிய நமக்கு சிறந்த மருத்துவராகிய வாதவூரடிகள் திருவாசகத்தேனை 656 பாடல்களில் தந்து அந்நோய் தீர  அருளினார்கள்.

அல்லல் அறுக்கும்!

தொல்லை யிரும்பிறவி சூழுந்தளை நீங்கும். தேன் மந்தத்தை தவிர்க்கும்; திருவாசகத்தேன் அறியாமையை அகற்றும். அல்லல்கள் அனைத்தும் அறியாமையால் விளைகின்றன. அறியாமையால் விளையும் அல்லல்கள் அனந்தம். கவர் பிளந்த மரத்தொளையில் கால் நுழைத்துக் கொண்டு குரங்கு ஆப்பை அசைத்து எடுத்து விட்டது. பிளந்திருந்த மரம் நெருங்கியவுடன் அவ்வானரத்தின் வேதனைக்கு எல்லையுண்டோ? ஏன், இத்துன்பம் அதற்கு எய்தியது? அறியாமையால் வந்தது. இங்ஙனம் மக்கள் அறியாமையால் இடர்கள் எய்துகின்றனர். இத்தகைய அறியாமையை அறவே களையவல்லது திருவாசகத் தேன்.

ஆனந்தம் அளிக்கும்!

தேன் நல்ல ரத்தத்தை தரும். மேலும் பிறவி நோயும் அறியாமையும், அகன்றவுடன் சிவானந்தம் விளையும். அந்த ஆனந்தத்தை அளிக்கும் திருவாசகத் தேன்.

‘‘தொல்லை யிரும்பிறவிச் சூழுந்  தளைநீக்கி

அல்லல் அறுத்தானந்த மாக்கியதே – எல்லை

மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசக மென்னும் தேன்.’’