உணர்வு உண்மையை தேடும்! – மதிஒளி

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017

வேளைகள் விளைந்து கொண்டேயிருப்பவை. நேற்று மறந்து போய்விட்டது. இன்று அச்சமளிக்கிறது. நாளை நடுங்க வைக்கிறது. இவையெதுவுமே உண்மையல்ல என்பதை ஐந்தறிவுள்ள உயிரினங்கள் நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கின்றன.

இயற்கை வேறு. நீ வேறு அல்ல. நாம் யாவருமே அந்த மாபெரும் பேரருளின் பல வடிவங்களில் சில பரிணாமம்தான்.  ஒவ்வொரு வடிவத்துக்கும் மற்றொன்றுடன்  பிணைப்பு நிச்சயம் உண்டு. இல்லையென்று சொல்வ தெல்லாம் இமை மூடிய பார்வை.

அழகான மலரையோ, மரத்தையோ பார்க்கிறோம். அதன் புனிதம், அழகு, அசைவில்லாத அமைதி, அதன் பெருமை, இவை யாவும் இறைவன் அவற்றிற்கு ஊட்டிய ஆச்சரியமான அடையாளங்கள். இப்படி நாம் உணர்ந்ததால், நமக்கு அவற்றை  பற்றிய  உண்மை  தெளிவுபடுவதால்தான் இயற்கையும் தன்னை உணர்ந்து கொள்கிறது. அதன் அழகையும், புனிதத்தையும், நாம் காட்டியபடி அதுவும் ஏற்றுக்கொள்கிறது.

எல்லாவற்றையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவர மனிதன் முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டான். இவைதான் மாற்றம், புதுமை, வளர்ச்சி என்று பெயரும் சூட்டிவிட்டான்.

ஆனால் – அவனால் அடக்க முடியாதது அவனது ஆணவம் மட்டுந்தான். அறிவின் அடித்தளத்தையே ஆட்டங்காண வைக்கும் இந்த ஆணவத்துக்கு மட்டும் அவன் அடிபணிந்து விட்டான்.

கழுதைக்கு சுமந்தால்தான் சுகமாக இருக்கிறது. காட்டாற்றுக்கு கரையை உடைத்தால்தான் களிப்பாயிருக்கிறது. இருள் சுமந்த மேகத்துக்கு இருப்பதையெல்லாம் கொட்டித் தீர்த்தால்தான் லேசாக இருக்கிறது.

வெற்வேறுவிதமான வேகங்களுக்கு வெற்றியும் மகிழ்ச்சி. வீழ்ச்சியிலும் ஒரு மகிழ்ச்சி. உணரும்போது எல்லாமே உண்மையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பலம் எல்லாம் பாதிக்கு குறைவாகவே இருக்கிறது. பலவீனங்கள்தான் மீதியை இட்டு நிரப்புகின்றன.

வாசல் திறந்திருந்தால் வருபவர்களை அது அழைக்கும். வாய்ச்சொல்

சிறந்திருந்தால் மதிப்பை அது உயர்த்தும்.  தவிர்க்க முடியாமல் செய்தது தவறாக இருந்தால், அதற்கும் உரிய தண்டனை உண்டு.

தம்பட்டங்களெல்லாம் விளம்பரங்களல்ல. தும்பெட்டும் வரையில்தான் மாடு மேய முடியும். கட்டுப்பாட்டுக்குள் சுற்றிக் கொண்டிருப்பது கடினம்தான்.  ஆனால் தன்னை அறிந்து கொள்ள முடியாதவரை கட்டுப்பாடுகள் ஒரு தற்காப்புதான்.

கிணற்றுக்குள் விட்ட குடம், ஓசையிலும் நீர்க்குமிழியிலும் ஓரிரு விநாடிகள்

மூழ்கத் தவிக்கிறது. நீர் நிரம்பியதும் நிறைந்து அமைதியடைந்து விடுகிறது. எல்லா சத்தங்களும் பாடங்களல்ல. அவை நம்மை விட்டு போகின்றன என்றே அந்த மிரட்டல்கள் காட்டுகின்றன.

ஆழத்தில் சென்றால்தான் முத்தெடுக்க முடியும். அட்டவணையிட்டால்தான் நிகழ்ச்சிகள் சீராக நடைபெறும். என்ன கிடைத்துவிட்டது என்பதற்காக கொள்ளும் மகிழ்ச்சியைவிட என்ன கிடைக்க வேண்டும் என்பதற்காக கொள்ளும் முயற்சியே நம்மை முன்னேற்றக்கூடியது.

நின்றிருந்தால் அது நிஜம். கிடத்தப்பட்டால் அது பொய். எதை நிஜமென்று நம்பிக் கொண்டிருக்கிறோமோ, அதில் பொய்யும் புகுந்து கொண்டிருக்கிறது.

தடங்கள் நடந்து நடந்தே உருவாக்கப்பட்டிருக்கின்றன. தடுக்கி விழுந்துவிடுவோம் என்று பயப்பட்டிருந்தால், அடுத்த அடி வைக்கும் இடமே அகப்பட்டிருக்காது. வாழும் வரை இந்த வாழ்க்கையில் நாம் பதிக்கும் தடங்கள் அர்த்தமுள்ளவையாக இருக்க வேண்டும்.

கணக்கெடுக்கும் போதுதான் கூடியதும் தெரியும், குறைந்ததும் தெரியும். அவ்வப்போது அதனை சரிபார்த்து கொண்டிருக்க வேண்டும். ஒரு நாள் மறந்தாலும் அந்த வேளை ஏற்படும் இழப்புக்கு என்றுமே ஈடு செய்ய முடியாது. வலிமை கையில் உருவாகலாம். ஆனால், அதை மனதால்தான் காட்ட வேண்டும். மறைவாகத்தான் காட்ட வேண்டும். பிறர் மதிக்கும்படிதான் காட்ட வேண்டும்.

பாலைவனவெளியெல்லாம் சுட்டெரிக்கும் நெருப்பு. அந்த மணலை வாரி எங்கும் புழுதியாக்கும் அடங்காத காற்றின் வேகம் எங்கோ தெரியும் ஒரு சிறு பசுமையின் பரப்பைக் காண அங்கு பாதயாத்திரை.

விதிக்கப்பட்ட நியாயங்களை விழி திறந்து பார்த்தால்தான் விளங்கிக் கொள்ளமுடியும். எந்த துயரமும் தொட்டுக் கொள்ளத்தான். எந்த பயமும் எட்டித் தள்ளத்தான். ஒரு பெரிய மவுன பரப்பு இயற்கை முழுவதையும் அணைத்துக் கொண்டிருக்கிறது. ஆம்! அது உன்னையும் தாங்கிக் கொண்டிருக்கிறது. அதுவே உண்மை.