லட்சியம் உயர பக்கபலம் தேவை! - – மு.திருஞானம்

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017

உயர்ந்த லட்சியங்களுக்கு, உடனிருப்பவர் கொடுக்கும் ஒத்துழைப்புதான் வெற்றிக்கு அடித்தளம். தலைவன் வெற்றிபெற தொண்டனின் ஆத்மார்த்த உழைப்புதான் உறுதுணையாக இருக்கும். உயர்ந்த கொள்கை உடையவர்களுக்கு பரந்த மனப்பான்மை அவசியம் வேண்டும். தனக்கென வாழாப் பெருந்தகைகள் இன்றும் உலகில் போற்றப்படுவதும் சரித்திரத்தில் பேசப்படுவதும் ஏன்? அவர்கள் வாழ்ந்த காலத்தில் தங்களை பற்றிய கவலையின்றி, சுயநல சிந்தனை இன்றி மற்றவர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்திப்பதில்தான் தீவிரமாக இருப்பார்கள்.

மகாபாரதத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கதாபாத்திரம், கர்ணன்.பிறந்ததும் தாயை பிரிந்தான். வளர்ந்தது தேரோட்டி அணைப்பில். உயர்ந்தது நண்பனின் அரவணைப்பில். இப்படி தன்னைப் பற்றி அவன் சிந்திக்கவில்லை. தன் லட்சியத்தில் முன்னேறுவதுதான் குறிக்கோளாக இருந்தான்.

சிறந்த வில்வீரனாக வேண்டும், போர்க்கலை பயிற்சி பெற வேண்டும் என்று சாதாரண தேரோட்டி மகனாக இருந்த கர்ணன் – பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு வித்தையை கற்றுத்தர மாட்டேன் என்று சபதமிட்டிருந்தவரிடம் தன்னை ஒரு அந்தணனாக அவரிடம் கூறி, வித்தைகளை கற்றான். நண்பனின் ஆதரவினால் அங்கதேச மன்னன் ஆனான். தான் தானமாக பெற்ற நாட்டுக்கு மன்னனாக இருந்து கொண்டே தான, தர்மங்களை சீரிய முறையில் செய்தான். கர்ணனின் மனைவி சுபாங்கி கணவனின் நோக்கம் அறிந்து செயல்படுபவள்.

வள்ளுவருக்கு ஒரு வாசுகி போல், காந்திஜிக்கு ஒரு கஸ்தூரிபாய் அம்மையார் போல், கணவன் தன்னை நாடி வரும் வறியவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளி வழங்குவதற்கு எந்தவித இடையூறுமின்றி, கணவனின் லட்சியத்திற்கும், கொள்கைக்கும் உறுதுணையாக இருக்கிறாள்.

நன்றி மறவாத எண்ணத்திலும் கர்ணன் தன்னை ஒரு உதாரண புருஷனாகவே காட்டி விட்டான். பஞ்சபாண்டவர்களில் மூத்த  மைந்தன் கர்ணன்தான் என்ற ரகசியம் தெரிந்த பொழுது, தாய் குந்திதேவி பாண்டவர் பக்கம் கர்ணனை அழைத்த போது, கொண்ட கொள்கையில் மாற்றமில்லாமல் ‘‘செஞ்சோற்று கடன் கழிக்க நண்பன் துரியோதனனுடன் இருப்பேன். தேவைப்பட்டால் உயிரும் கொடுப்பேன்’’ என்று தாயிடம் செல்லிய விதம் தாயையே சிலிர்க்க வைத்தது.

பிறந்தது முதலே தன்னலம் கருதாமல் பிறர் நலனுக்காகவும், பிறர் விருப்பத்திற்காகவும் செயல்பட்ட அந்த கர்ணன்,  இறுதியில் போரில் உயிர் விடும் சூழ்நிலையிலும் அந்தணர் வடிவில் வந்த கிருஷ்ணரிடம் தான் செய்த தானதர்ம பலன்களையே, புண்ணியங்களையே தானமாக்கினான். தர்மதேவதையே தடுத்தும் அதை ஏற்கவில்லை. அப்படிப்பட்ட அந்த புண்ணியாத்மா கர்ணனின் சுயநலமற்ற செயல்பாடுதான்.  

மகாபாரதம் இதிகாச சம்பவங்களில் மறக்க முடியாத உன்னத மாமனிதனாக கர்ணனை உயர்த்தியது! இன்றும் மக்களால் மதிக்கப்படும் உத்தமனாக – தானம் என்றால் கர்ணன் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றான்.

கர்ணனின் இந்த வெற்றிக்கு உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்தவர்கள் கர்ணனை வளர்த்த தேரோட்டி மற்றும் தேரோட்டி மனைவி – கர்ணன் மனைவி சுபாங்கி தன் வசதிக்காக கூட  கர்ணனைத் தொல்லை கொடுக்கவில்லை. கணவனின் கொள்கைக்கு ஆதரவு கொடுத்தாள்.

நண்பன் துரியோதனனும் அவனது கொடைத்தன்மைக்கு குறைவின்றி உறுதுணையாக இருந்தான். தன்னை கொல்ல முடியாத எதிரிக்குக் கூட தானம் கொடுத்து உயர்ந்தவன் கர்ணன் என்று சரித்திரம் பேசும் வகையில் அவனது செயல்பாடுகள் அமைந்தன!

அதனால்தான் உயிர் பிரியும் நேரத்தில் பரந்தாமன் – கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் கர்ணனுக்கு கிடைத்தது!

வாமன அவதாரத்தில் மாபலிச் சக்கரவர்த்திக்கு கிடைத்த விஸ்வரூப தரிசனம் – மகாபாரதத்தில் குருஷேத்திர யுத்தக்களத்தில் அர்ஜுனனுக்கு கீேதாபதேசம் செய்த பொழுது அர்ஜுனனுக்கு காட்சி கொடுத்த விஸ்வரூப தரிசனம் – அதே போர்க் களத்தில் கர்ணன் தன் புண்ணியங்களை தானம் செய்த போது கர்ணனுக்கு பரந்தாமனின் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது!