தெய்வ தரிசனம்!

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017

அங்கங்களெல்லாம் கூனிக் குறுகி, கையெடுத்து வணங்கி, அவனை நான் வரவேற்கிறேன்.

அவன் முகம் புன்னகையால் மலர்கிறது.

என்னை அறிந்து கொண்டவன் போல் அவன் காட்சியளிக்கிறான்.

‘‘உன்னை தேடித்தான் போய்க் கொண்டிருக்கிறேன். உனக்காகவே இந்த பரிவாரங்கள். சற்று முன்னதாகவே வந்து விட்டாய். ஆலயத்துக்கு வா!’’

இறைவன் என்னையும் தேரிலேற்றிக் கொள்கிறான்.

நான் உட்கார்ந்ததும் அந்த தேரின் அழகே குலைந்து விடுகிறது.

அது எனக்கே தெரிகிறது.

ஆனால், தாங்க முடியாத பரிவாரங்கள் அதை வெளிக்காட்டிக் கொள்கின்றன.

இறைவனும் நானும் ஆலயத்திற்குள் வருகின்றோம்.

மேய்ப்பவனுக்கு பின்னால் செல்லும் ஆட்டுக் குட்டி போல், இறைவன் பின்னால் நான் நடக்கிறேன்.

நவமணிகளால் ஆன தூண்களும், கண்ணை பறிக்கும் வர்ண விளக்குகளும், எங்கும் பதிக்கப்பட்டிருக்கும் நிலைக் கண்ணாடிகளும் ஆலயத்திற்கு அணி செய்கின்றன.

நான் அவற்றை முன்பின் கண்டதில்லை.

ஓரிடத்தில் இறைவன் அமர்கிறான்.

என்னையும் அமர வைக்கிறான்.

ஏதும் பேசாது மவுனமாக இருக்கிறான்.

நான் பேச அஞ்சுகிறேன்.

பின் அவனே பேசுகிறான்.

‘‘உலகம் எப்படி இருக்கிறது?’’

இறைவனின் கேள்வியா இது?

உலகத்தையே இறைவன் மறந்து விட்டானா?

என்னை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறானா?

அவனே சொல்கிறான்:

‘‘பக்த கோடிகளின் பஜனை, பூஜை, மணியோசைகளால் என் செவிகள் அடைபட்டுக் கிடக்கின்றன. நீ எனக்கு சொல். உலகம் எப்படி இருக்கிறது?’’

நான் சொல்கிறேன்:

‘‘என்னை பார்; உலகம் இப்படித்தான் இருக்கிறது!’’

இறைவன் அழவில்லை!

அமைதியாக இருக்கிறான்.

நான் மேலும் சொல்கிறேன்:

‘‘வாழ்க்கை என்பது என்ன என்றே சொல்லித்தராமல் மனிதர்களை படைத்து விட்டாயே இறைவா!

அதை எனக்காவது சொல்; நான்  ஊருக்கு சொல்கிறேன்.

உன் குரல் பூமியில் கேட்காவிட்டாலும், என் குரல் கேட்கிறது.

காற்றிலும், நெருப்பிலும் கலந்திருக்கும் இறைவா!

உன்னை உலகம் கண்டு கொள்ளா விட்டாலும் என்னைக் கண்டு கொள்கிறது.

உயிர்களுக்கெல்லாம் நீயே மூலம்.

சொற்களுக்கெல்லாம் நானே தலைவன்.

ஏனென்றால், நான் கவிஞன்.

– தொடரும்

- கவிஞர் கண்ணதாசனின்  ‘தெய்வ தரிசனம்’  நூலிலிருந்து...