மிகைபட சொல்லேல்!

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017

வளயனூரில் வள்ளியப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் ‘தொண தொண’வென்று பேசிக் கொண்டே இருப்பான். கேட்பவர்கள் வெறுக்கும் அளவுக்கு அவனுடைய பேச்சு இருக்கும். எதையும் மிகைப்படுத்திப் பேசுவான். அளவோடு பேச அவனுக்கு தெரியவில்லை. இதனால் அவன் பல துன்பங்களுக்கு ஆளானதுண்டு. எனினும், அவன் திருந்தவில்லை.

ஒரு நாள் சாலையில் அவன் தேனீர் பருக தேனீர் கடைக்கு சென்றான். அங்கே பெரும்பாலானோர் கூடியிருந்தனர்.

முந்தைய நாள் இரவு தேனீர்க்கடைக்காரர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை வழக்கம்போல வெளியே நிறுத்தியிருந்ததாகவும், அதை யாரோ ஒருவன் திருடிச் சென்று விட்டதாகவும் அங்கிருந்தோர் பேசிக் கொண்டனர்.

வள்ளியப்பன் தன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், அந்த தேனீர்க்கடைக்காரரின் இரு சக்கர வாகனத்தை நேற்று இரவு கன்னங்கரே லென்றிருந்த ஒருவன் திருடி சென்றதாகவும், அதை தன் இரண்டு கண்களால் மறைவில் ஒளிந்திருந்து பார்த்ததாகவும் மிகைப்பட  பேசினான். தான் சொல்வது பொய் என்பதை அவனே அறிவான். எனினும், எதையும் மிகைப்படுத்தி பேசுவது அவனுடைய பிறவிக்குணம் என்பதால் அவன் அப்படிக் கூறினான்.

உடனே தேனீர்க்கடைக்காரர் விரைவாக வந்து, வள்ளியப்பனின் சட்டையை பிடித்துக் கொண்டு ‘‘நட, காவல் நிலையத்திற்கு. என் இரு சக்கர வாகனத்தை ஒரு திருடன் திருடி செல்வதை நீ பார்த்திருந்தும் கூச்சல் போட்டு மக்களை எழுப்பாமல், அவன் திருடி செல்வதற்கு நீயே காரணமாக இருந்துள்ளாய்’’ என்று கூறி, அவனை காவல் நிலையத்தில் போய் உட்கார வைத்து விட்டார்.

சிறிது நேரத்தில் காவல் துறை அதிகாரி வந்தார். திருட்டு நடப்பதற்கு உறுதுணையாக இருந்ததற்காக வள்ளியப்பனை தடியால் அடித்தார். அடி பொறுக்க இயலாத வள்ளியப்பன் ‘‘ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். எதையும் அளவுக்கு அதிகமாக பேசுவது என்னுடைய பழக்கம். அதனால்தான் இப்படி பேசினேன். அந்த கடைக்காரரின் இரு சக்கர வாகனத்தை நான் பார்க்கவில்லை. அதை திருடி சென்ற திருடனையும் நான் பார்க்கவில்லை’’ என்று உண்மை கூறினான்.

காவல் துறை அதிகாரி வள்ளியப்பனை பார்த்து, ‘‘இனிமேல் அளவுக்கு அதிகமாக பேசாதே’’ என்று அறிவுரை கூறி, அவனை வெளியே அனுப்பினார். வள்ளியப்பன் அன்று முதல் அளவுக்கு அதிகமாக பேசும் பழக்கத்தை விட்டுவிட்டான்.

கருத்து: எதைப் பற்றியும் அளவுக்கு அதிகமாக பேசக்கூடாது.

(நன்றி : ‘அவ்வையாரின் ஆத்திசூடி  நீதிக்கதைகள்’)