நமது குறைபாடுகளின் வல்லமை!

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017

ஊழியத்துக்காக தேவன் மோசேயை அழைத்தபோது அவன் ‘‘ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்கு பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்கு வாயும் மந்தநாவும் உள்ளவன்’’ என்று பதிலளித்தான் (யாத். 4:10).

மோசேவுக்கு பேச்சில் ஏதோ குறைபாடுள்ளது போல் தெரிகிறது. ஒரு வேளை அவன் திக்குவாயனாக இருந்திருக்கலாம். தேவன் அவனிடம் ‘மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும், செவிடனையும், பார்வையுள்ளவனையும், குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?’’ என்று கூறினார் (வச.11)

நமது குறைபாடுகளும் ஊனங்களும் தேவனால் அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவர் ஒரு வேளை அவற்றை அகற்றாமல் இருக்கலாம்; ஆனால் அந்த குறைபாடுகளை நன்மைக்காக பயன்படுத்தும்படி அவர் நமக்கு பலத்தை கொடுக்கிறார்.

நமது பலவீனங்கள் நாம் தேவனை தேடும்படியும், அவரை சார்ந்திருக்கும்படியும் செய்கின்றன. அவை உண்மையில் நமக்கு தடையாக அல்ல பயன் தருவதாகவே உள்ளன. அவை நமக்கு வெகு சிறப்பான முறையில் அமைகின்றன. ஏனெனில், தடைகளை தகர்க்கும் போது நாம் துணிவிலும், வல்லமையிலும், சந்தோஷத்திலும் வளர்ச்சி பெற்று எவ்வளவாக நாம்

ஆண்டவரை சார்ந்திருக்கிறோம் என்பதை கண்டுகொள்கிறோம்.

தமது குறைபாட்டை அகற்றும்படி பவுல் அப்போஸ்தலன் மூன்று முறை வேண்டிக்கொண்டார். ஆனால் தேவன் ‘என் கிருபை உனக்கும் போதும்’ என்று பதிலளித்துவிட்டார் (2 கொரிந்தியர் 12:9). பிறகு பவுல் தனது குறைபாடுகளிலும் மகிமைப்படுத்தினார்; ஏனென்றால், அவை தன்னை கட்டுப்படுத்துவதில்லை என்பதை அவர் உணர்ந்தார். ‘‘நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்’’ என்று அவர் கூறியிருக்கிறார் (வச. 10).